பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய சி.வி.சண்முகம் விசாரணைக்கு ஆஜராகுமாறு மாநில மகளிர் ஆணையம் சம்மன்
சென்னை: பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய சி.வி.சண்முகம் விசாரணைக்கு ஆஜராகுமாறு மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் இலவச திட்டங்களுடன் பெண்களை இணைத்து பேசியது சர்ச்சையானது. இந்தநிலையில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிவி சண்முகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடந்த 17ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பிய போது, அவரது வழக்கறிஞர் ஆஜராகி நேரம் கேட்டிருந்தார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக சி.வி சண்முகத்திற்கு மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற 7ஆம் தேதி காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.