மணிக்கணக்கில் நெரிசலில் சிக்கினால் ஏன் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும்? உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி
புதுடெல்லி: கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பாலியேக்கரா சுங்கச்சாவடியில் தேசிய நெடுஞ்சாலை 544 பகுதியில் நடந்து வரும் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டதால் கடந்த ஆக.6ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் வசூலிப்பதை கேரள உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் வினோத்சந்திரன், என்வி ஆஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள், 65 கிலோமீட்டர் நெடுஞ்சாலைப் பகுதியை கடக்க 12 மணி நேரம் எடுத்துக்கொண்டால், பயணி ஏன் ரூ.150 சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். நீதிபதிகள் கூறுகையில்,’ அங்கு லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும், 12 மணி நேர பயணம் என்பது நியாயமல்ல. எனவே சுங்கச்சாவடி வசூலை நிறுத்தி வைத்த உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை’ என்று தெரிவித்தனர்.