கஸ்டம்ஸ் சாலை விரிவாக்கம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கடலூர் : கடலூர்-பண்ருட்டி புறவழிச்சாலையாக, மேல்பட்டாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் கடலூர் ஆல்பேட்டையில் இருந்து மேல்பட்டாம்பாக்கம் வரை கஸ்டம்ஸ் சாலை அமைக்கப்பட்டது. கடலூரில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள், கஸ்டம்ஸ் சாலையில் கொட்டப்பட்டு வந்தது. மேலும் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்ததை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சாலை விரிவாக்கம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், கடலூர் கஸ்டம்ஸ் சாலை 15 கி.மீ நீளத்திற்கு வெளிவட்ட சாலையாக அமைந்துள்ளது.
ஒருவழி பாதையாக உள்ள கஸ்டம்ஸ் சாலையை நெடுஞ்சாலைத்துறை மூலம் இருவழி பாதையாக அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, முதற்கட்ட பணிகளாக இச்சாலையை கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோண்டூர் மற்றும் நத்தப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் 1.5 கி.மீ கஸ்டம்ஸ் சாலையில் தூய்மை பணிகளாக பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் தூய்மை பணியாளர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு எவ்வித சுகாதார சீர்கேடும் ஏற்படாத வகையில் குப்பைகள் அகற்றப்பட்டது.
மேலும், இப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இப்பகுதியில் குப்பை கொட்டுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மீறி குப்பைகளை கொட்டினால் சட்டப்படி அபராதத்துடன் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, பயிற்சி ஆட்சியர் மாலதி, உதவி இயக்குனர் ஷபானா அஞ்சும், மாநகராட்சி ஆணையாளர் முஜிபூர் ரஹ்மான், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சக்தி, பாண்டியன், ஊராட்சி செயலாளர் வேலு ஆகியோர் உடன் இருந்தனர்.