போலி நகை கொடுத்ததாக கூறி இளம்பிள்ளை தனியார் வங்கியை வாடிக்கையாளர்கள் முற்றுகை
இளம்பிள்ளை : சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த கல்பாரப்பட்டி, மலங்காடு பகுதியை சேர்ந்த கோபால் மகன் ராஜா (23). இவர் இளம்பிள்ளையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் 21.10.2023ம் ஆண்டு, நகை கடனாக ரூ.2.35 லட்சம் பெற்றுள்ளார். தான் வாங்கிய கடனை கட்ட முடியாத சூழ்நிலையில் இருந்த இவர், மாற்று வங்கி உதவியுடன் ரூ.2.69 லட்சம் பெற்று நகையை மீட்டார்.
பின்னர், நகையை வாங்கிய அவர் வங்கியின் வெளியே வந்து மாற்று வங்கியின் ஊழியரிடம் நகையை கொடுத்தபோது, அது போலி நகை என தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா, நகையை மீட்ட வங்கியில், உடனடியாக வங்கி ஊழியரிடம் ஒப்படைத்தார். அதனை வாங்க மறுத்த ஊழியருக்கும், ராஜாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் ராஜா அந்த நகையினை திருப்பி வாங்காமல், மகுடஞ்சாவடி போலீசில் வங்கி ஊழியர் கவரிங் நகையை கொடுத்ததாக புகார் அளித்தார்.
வங்கியில் போலி நகை கொடுத்தது தெரிய வந்ததும் ராஜாவின் உறவினர்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வங்கியை முற்றுகையிட்டனர். அதன் பெயரில் எஸ்ஐ ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து, சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வங்கியில் உள்ளவர்கள், இவர் நகையினை வெளியே கொண்டு சென்று மாற்றி வந்ததாக கூறியதால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வங்கியின் நுழைவு வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், பிரச்னை தொடர்ந்து வந்ததால், போலீசார் பொதுமக்களிடமும், வங்கி ஊழியரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று காலை, இது குறித்து காவல் நிலையம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்தனர்.
வங்கி ஊழியரிடம் ராஜாவின் நகை, வங்கியில் தற்போது உள்ளது என எழுதி பெற்று தந்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 5 மணி நேரம் வங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.