நடப்பாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8% ஆக இருக்கும்: ரிசர்வ் வங்கி கணிப்பு
டெல்லி: அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 6.4% ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜி.டி.பி.) 6.8% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முன்னதாக இது 6.5% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியிருப்பதாவது; தற்போதைய வரி மற்றும் வர்த்தகக் கொள்கைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை ஆகியவை வெளிநாட்டு வணிகத்தை பாதிக்கக் கூடும்.
அதோடு, புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு இடையில், முதலீட்டாளர்களின் எச்சரிக்கை உணர்வின் எதிரொலியாக சர்வதேச நிதி சந்தைகளில் நிலவும் ஏற்ற இறக்கங்கள், நமது வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். கடந்த ஆகஸ்ட் 15-ந்தேதி பிரதமரால் அறிவிக்கப்பட்ட வளர்ச்சிக் கட்டமைப்பு சீர்திருத்தங்களை செயல்படுத்துவது, ஜி.எஸ்.டி.யை ஒழுங்குபடுத்துவது ஆகிய நடவடிக்கைகள், வெளிப்புறத் தடைகளின் சில பாதகமான விளைவுகளை ஈடுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காரணிகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த ஆண்டுக்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இப்போது 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது எங்கள் முந்தைய கணிப்பான 6.5%-ல் இருந்து சற்று அதிகமாகும். அதே சமயம், நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 7% ஆகவும், மூன்று மற்றும் நான்காம் காலாண்டுகளில் முறையே 6.4% மற்றும் 6.2% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே போல், அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 6.4% ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.