கடலூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் காய்ச்சல்: சிகிச்சை பெற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஏராளமானோர் வருகை
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அதிகளவில் காய்ச்சல் பரவி வருவதால் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அதிகளவில் குழந்தைகளுடன் பெண்கள் நீண்ட வரிசையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் மற்றும் விட்டு விட்டு மழையும் பெய்து வருகிறது. சீதோஷ்ண நிலை காரணமாக பலருக்கும் காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில் கடலூரில் அனைத்து பகுதிகளிலும் சிறியவர் முதல் முதியவர் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் சளி, இருமல் போன்ற சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த வாரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காலை 7 மணி முதல் நீண்ட வரிசையில் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.
அதிகளவில் கூட்டம் கூடும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்வதால் காய்ச்சல் ஏற்பட்டதாகவும், இதனால் மருத்துவர்களை சந்திருப்பதாகவும், அவர்கள் ரத்த பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
சுப நிகழ்ச்சிகளில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூட்டமாகவே கலந்துகொண்டதே காரணம் எனவும் 2-3 நாட்களுக்கு மருந்து எடுத்துக் கொண்டு ஓய்வெடுத்தாலே போதுமானது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சலால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.