சஞ்சு சாம்சனுக்காக ஜடேஜா, ருதுராஜ், துபேவை விட்டுக்கொடுக்க முடியாது: ராஜஸ்தானுக்கு சிஎஸ்கே பதிலடி
மும்பை: 2025ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இதனால் 2026 சீசனில் பல வீரர்களை கழற்றிவிட சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ராஜஸ்தான் அணியின் கேப்டனாக உள்ள சஞ்சு சாம்சனை வர்த்தக மாற்றத்தின்படி பெற சிஎஸ்கே முயற்சி மேற்கொண்டுள்ளது. ராஜஸ்தான் கேப்டனாக இருக்கும் சாம்சனுக்கும் அந்த அணி நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் அவர் வேறு அணிக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவரை பெற ராஜஸ்தான் அணியை தொடர்பு கொண்ட போது அந்த அணி நிர்வாகம், ‘சாம்சனை நாங்கள் தாராளமாக தருகிறோம்.
ஆனால் அதற்கு பதிலாக ஜடேஜா, சிவம் துபே அல்லது ருதுராஜ் என இந்த 2 வீரர்களின் 2 பேரை மட்டும் எங்களுக்கு தந்துவிடுங்கள்’ என்று கூறி இருக்கிறது. ராஜஸ்தானின் இந்த நிபந்தனை சிஎஸ்கேவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. மேற்கண்ட 3 வீரர்களை விட்டுக் கொடுக்க முடியாது, சஞ்சு சாம்சனை மினி ஏலத்தில் வாங்கிக் கொள்கிறோம் என சிஎஸ்கே அறிவித்துள்ளது. சஞ்சு சாம்சனை ஏலம் எடுக்க வேண்டும் என்பதற்காக அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, கான்வே, ராகுல் திரிபாதி, தீபக்கூடா உள்ளிட்ட வீரர்களை விடுவிக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.