சிஆர்பிஎப் படையினர் அனுமதி மறுப்பு அமித்ஷா ஹெலிகாப்டர் தரை இறங்குவதில் சிக்கல்
நெல்லை: நெல்லைக்கு நாளை வருகை தரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாஜ.வின் தென்மண்டல பூத் கமிட்டி மாநாடு நெல்லையில் நாளை (22ம் தேதி) நடக்கிறது. இந்த மாநாட்டில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார். அமித்ஷாவின் பயண விவரங்களின்படி, அவர் கேரளாவில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை (22ம் தேதி) மதியம் 2.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, பிற்பகல் 3.10 மணிக்கு நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் பொறியியல் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் வந்து இறங்குவதாகவும், 3.25 மணிக்கு காரில் மாநாட்டு மேடைக்குச் சென்று நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிவிட்டு, மாலை 5 மணிக்கு மாநாட்டை முடித்துக் கொண்டு மீண்டும் அதே ஹெலிபேடு தளம் வழியாக தூத்துக்குடி சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புவதாகவும் திட்டமிடப்பட்டு இருந்தது.
ஹெலிபேடு அமைக்கப்பட்ட இடத்தில் நேற்று ஹெலிகாப்டர் இறங்குவதற்கான ஒத்திகை நடைபெற்றது. அப்போது, ஹெலிகாப்டர் தரையிறங்க போதிய இடவசதி இல்லை என்பதும், ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர்கள் அங்கு தரையிறங்குவது பாதுகாப்பாக இருக்காது என்றும் சிஆர்பிஎப் வீரர்கள தெரிவித்தனர். இதனால், அங்கு இறங்க அவர்கள் அனுமதி மறுத்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சிஆர்பிஎப் வீரர்களும், நெல்லை மாநகர காவல்துறையினரும் மாற்-று இடமாக பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் ஏற்கனவே உள்ள ஹெலிபேடில் இறங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.