புதிய ஐபோன் 17 வாங்க குவிந்த கூட்டம்; வரிசையில் முண்டியடித்ததால் அடிதடி: வாடிக்கையாளர்கள் மோதலால் பரபரப்பு
மும்பை: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 17 ரக செல்போன்களின் விற்பனை இன்று மும்பையில் தொடங்கியது. இதனையொட்டி, மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மைக் கடையில் செல்போனை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. முதல் ஆளாக செல்ேபானை வாங்குவதற்காக பலர் முதல் நாள் இரவில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விற்பனை தொடங்கிய காலை நேரத்தில், சிலர் வரிசையில் முந்திச் செல்ல முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இது பின்னர் தள்ளுமுள்ளுவாக மாறி, வாடிக்கையாளர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் அளவிற்கு கைகலப்பாக முற்றியது. உடனடியாக அங்கு வந்த பாதுகாவலர்கள் சண்டையை விலக்கிவிட்டதுடன், தகராறில் ஈடுபட்ட ஒருவரை அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.
இந்த மோதல் தொடர்பான காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபோன் 17, ஐபோன் ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய புதிய ரக செல்ேபான்கள் அறிமுகம் செய்யப்பட்டன. குறிப்பாக, ப்ரோ மேக்ஸ் வகையில் அறிமுகமான ‘காஸ்மிக் ஆரஞ்சு’ என்ற புதிய வண்ணத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது. முன்பதிவு செய்தவர்கள் செல்ேபான்களை பெறுவதற்கும், நேரடியாக வாங்குவதற்கும் ஒரே நாளில் அனுமதிக்கப்பட்டதால் கூட்டம் அதிகரித்தது. மும்பையைப் போலவே டெல்லி, பெங்களூரு போன்ற பிற நகரங்களிலும் உள்ள ஆப்பிள் கடைகளில் செல்போன்களை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.