பலபயிர் சாகுபடியில் முன்னாள் தலைமை ஆசிரியர்!
குமரி மாவட்டம் வேர்க்கிளம்பிக்கு அருகே உள்ள மாவரவிளை பகுதியைச் சேர்ந்தவர் லாசர். முன்னாள் தலைமை ஆசிரியரான இவர் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் பல்வேறு பயிர்களை பயிரிட்டு வருகிறார். நல்ல மிளகு, பாக்கு, வாழை, மா, தேக்கு, தென்னை என அனைத்தையும் ஒரே இடத்தில் வளர்த்து, தனது ஓய்வு காலத்தை விவசாயத்தின் பக்கம் திருப்பி, மகிழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். வீட்டையொட்டி உள்ள அவரது விளைநிலத்தில் பயிர்களைப் பராமரிப்பு செய்துகொண்டிருந்த லாசரை சந்தித்தோம். எனக்குத் தேவையான உணவுப் பொருட்களை நானே விளைவிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது நிலத்தில் என்ன மாதிரியான பயிர்களெல்லாம் பயிரிடமுடியுமோ, அதனை எனது வீட்டைச் சுற்றியே பயிரிட்டு வருகிறேன் என மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார் லாசர்.
நான் பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னதான் படித்துவிட்டு ஆசிரியரான போதிலும்கூட, விவசாயம் செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை. எம்ஏ பிஎட், எம்எட், டிஎஸ்சி படித்துவிட்டு ஒரு தனியார் பள்ளியில் 7 ஆண்டுகள் வேலை பார்த்து பின், அரசு பள்ளியில் ஆசிரியரானேன். 31 ஆண்டுகள் பணியாற்றி தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பின், விவசாயம் செய்ய வேண்டுமென்ற ஆசையை நோக்கிப் பயணித்தேன். இதுதான் நான் விவசாயத்திற்கு வந்த கதை என மேலும் தொடர்ந்தார். விவசாயம் செய்ய முடிவெடுத்த பிறகு, வீட்டையொட்டி உள்ள எனது நிலத்தில் இயற்கை உரங்களை பயன் படுத்தி பயிர்களை பயிரிட முடிவு செய்தேன். அதன்படி, தற்போது எனது நிலத்தில் 50 ரப்பர் மரங்கள், 50 நல்லமிளகு செடிகள், பாக்கு, வாழை, முருங்கை, மகாகனி, பலா, மா, தேக்கு, 60 தென்னை மரங்கள், அன்னாசிபழம் செடிகள், சிறுகிழங்கு, கூவைக்கிழங்கு உள்பட பல்வேறு தரப்பட்ட கிழங்குப் பயிர்களையும் சாகுபடி செய்து வருகிறேன்.
இந்தப் பயிர்களுக்குத் தேவையான உரங்களை நானே தயாரித்துக்கொள்கிறேன். எனது மரத்தில் உள்ள இலை தழைகளை சேகரித்து மரங்களைச் சுற்றி குழிதோண்டி அதனுள் போட்டு, அதன்மேல் மண்புழு உரங்களை இட்டு தண்ணீர் கொடுக்கிறேன். இதுதான் எனது சாகுபடி முறை. இந்த முறையில், எனது நிலத்தில் உள்ள பயிர்களில் இருந்து தினமும் எனக்கு குறைந்தளவு வருமானமும் கிடைக்கிறது.50 நல்லமிளகுச் செடிகளில் இருந்து தினமும் மகசூல் கிடைக்கிறது. 50 ரப்பர் மரங்களில் இருந்து தினமும் 2.5 லிட்டர் ரப்பர் பால் கிடைக்கிறது. அதேபோல, வாழையின் மூலமும் வருமானம் கிடைக்கிறது. வாழைக் குலைகள், பலாப்பழங்கள், கிழங்குகள், அயனிப் பழங்களை எனது உறவினர்களுக்கு வழங்கியும், விற்பனை செய்தும் வருகிறேன். அயனி மரங்கள், மகாகனி மரங்கள், தேக்குமரங்களை தற்போது விற்பனை செய்தால் கூட பல லட்சத்திற்கு விற்பனையாகும்.
நல்லமிளகுச் செடிகளைப் பராமரிப்பது எளிது. அதனைப் பயிரிடும்போது, அருகே ஒரு மரம் இருப்பதை உறுதி செய்யவேண்டும். அந்த மரத்தை சுற்றி நல்லமிளகுச் செடி வளரும். இதனால் தேக்குமரம், அயனிமரம் உள்பட நமது நிலத்திற்கு ஏற்ற மரங்களைச் சாகுபடி செய்யவேண்டும். நான் சாகுபடி செய்துள்ள நல்லமிளகு செடிக்கு வருடத்திற்கு இரு முறை மாட்டு சாணம், மண்புழு உரம், தேங்காய் மட்டை கழிவு ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றுவேன். பழமையான நல்ல மிளகு செடி ஒன்றில் இருந்து 5 கிலோ முதல் 10 கிலோ வரை நல்லமிளகு கிடைக்கிறது. 3 வருடம் ஆன நல்லமிளகு செடிகள் நாட்கள் செல்லசெல்ல மகசூல் அதிகமாக கொடுக்கும்.
அறுவடை செய்யப்படும் நல்ல மிளகிற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், மக்கள் வாங்கிச் ெசல்கின்றனர். அதுபோல் மொத்தமாகவும் விற்பனை செய்து வருகிறேன். மொத்தத்தில் எனக்கு உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து தினமும் வருமானம் பார்த்துவருகிறேன். ஓய்வு காலத்தில் வேறு வேலைக்கும் செல்லாமல் அதே நேரத்தில் எனக்கு பிடித்த விவசாயத்தையும் செய்ய முடிவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்கிறார் லாசர்.
தொடர்புக்கு:
லாசர்: 94425 58089.
6 மாதத்திற்கு ஒரு முறை கவாத்து
எனது தோட்டத்தில் நிற்கும் பழச்செடிகள், மரச்செடிகளை 6 மாதத்திற்கு ஒரு முறை கவாத்து செய்து வருகிறேன் என்கிறார் லாசர். அதுபோக, இயற்கை விவசாயம் தொடர்பாக விவசாயிகளுடன் அதிகாரிகள் பங்கேற்கும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறேன். அப்போது அதிகாரிகள், மரங்களில் கவாத்து செய்வது முக்கியம் என கூறுவார்கள். அவர் களின் ஆலோசனைப் படிதான் எனது தோட்டத்திலும் கவாத்து செய்கிறேன். கவாத்து செய்யும்போது மேல்நோக்கி செல்லும் மரம், விரிந்து பரவலாக இருக்கும். ஒரு கிளையை வெட்டும்போது அதில் இருந்து 4 கிளைகள் உருவாகும். இதனால் மகசூல் அதிகமாக கிடைப்பதுடன், பழங்களை பறிப்பதற்கு ஆட்களை நாம் பயன்படுத்தாமல் நாமே பழங்களை பறித்துக்கொள்ளலாம்.
நேந்திரம் குலை ரூ.855க்கு விற்பனை
எனது தோட்டத்தில் மட்டி வாழை மரங்கள் அதிகமாக உள்ளன. நாட்டு ரக ஏத்தன்(நேந்திரம்), செவ்வாழையும் உள்ளது. ஏத்தன் குலை ரூ.250 முதல் ரூ.500 வரைதான் விலைபோகும். ஆனால் நான் சாகுபடி செய்து இருந்த ஒரு ஏத்தன் குலை(தார்) ரூ.855க்கு விற்பனை செய்தேன். அந்த வாழையின் கன்றில் தற்போது ஒரு வாழை குலை வந்துள்ளது. இந்த குலை இன்னும் ஒரு மாதத்தில் அறுவடை செய்யலாம்.