பயிர்களைப் பாதுகாக்கும் உயிரி பூச்சிக்கொல்லிகள்!
விவசாயத்தில் பூச்சிகளின் தாக்குதல் காலம் காலமாக சவாலாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலினால் சுமார் 30 சதவிகிதம் பயிர் பாதிப்பு ஏற்படுவதாக ஒரு கணக்கு இருக்கிறது. இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிகளை விவசாயிகள் கையாண்டு வருகிறார்கள். இதில் அதீத ரசாயனப் பூச்சிக்கொல்லி பயன்பாட்டினால் பல எதிர்விளைவுகள் உண்டாகி சுற்றுச்சூழலுக்கு சவால் விடுக்கின்றன. பூச்சிகளின் எண்ணிக்கை பொருளாதார சேதநிலையை தாண்டும்போது மட்டும் பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்கலாம். பூச்சிகளின் தாக்குதல் என்பது அனைத்து வித பயிர்களிலும் காணப்படும். அதிலும் குறிப்பாக பணப்பயிர்களில் பாதிப்பு கடுமையாக இருக்கும். கடந்த 3-4 பத்தாண்டுகளில் தீவிர பயிர் சாகுபடியின் அறிமுகத்தால் பூச்சிக்கொல்லியின் உபயோகமும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் சராசரி பூச்சிக்கொல்லியின் உபயோகம் எக்டருக்கு சுமார் 570 கிராம் என்ற அளவில் இருக்கிறது. இது வளர்ச்சி பெற்ற நாடுகளான ஜப்பான், தாய்லாந்து மற்றும் ஜெர்மனியின் உபயோக அளவுகளை (11கி, 17கி, 3 கி) காட்டிலும் குறைவுதான் என்றபோதிலும், பூச்சிக்கொல்லி உபயோகத்தினால் வரும் விளைவுகள் அபாயகரமாக உள்ளது.
அதிக பூச்சிக்கொல்லி உபயோகத்தினால் நீர், மண் மற்றும் காற்று மாசுபடுவதோடு, பிற நன்மை தரும் உயிரினங்களான மகரந்தச்சேர்க்கை செய்யும் பூச்சிகள், ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள், வனவிலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக சுற்றுச்சூழல் சமநிலை பாதிப்படைந்து பூச்சிகளின் பெருக்கம் உருவாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுதல் ஆகிய எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன. மேலும் விவசாயிகளின் பயிர் உற்பத்திச் செலவு அதிகரித்து வருமானம் குறைகிறது. ரசாயன பூச்சிக்கொல்லிகளின் உபயோகத்தால் ஏற்படும் பல்வேறு விதமான இடர்ப்பாடுகளினால், அதன் உபயோகத்தை குறைத்து பூச்சிக்களை கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ரசாயன பூச்சிக்கொல்லி உபயோகத்தால் சுற்றுச்சூழலில் ஏற்படும் சுகாதாரக்கேடு மற்றும் விவசாயிகளின் பயிர் சாகுபடியில் செலவு அதிகரிப்பு, குறைந்த வரவு ஆகியவை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கு வழிவகுத்துள்ளது. ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைக் கையாண்டு ரசாயனப் பொருட்களை இணக்கமாக உபயோகித்து பூச்சிக் கட்டுப்பாடு செய்வதாகும். சுருக்கமாக சொன்னால், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (ஐபிஎம்) என்பது கைவினை முறை, உயிரி முறை மற்றும் ரசாயன முறைகளை சரியாகப் பிணைந்து திறன்பட சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல், அதேசமயம் சமுதாயத்தின் ஏற்புடைய முறையைக் கையாண்டு நோய், களை மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதாகும். ஐபிஎம்மின் முக்கியக்கூறுகள் வருமுன் காப்பு, கண்காணிப்பு மற்றும் செயல்பாடு ஆகும். இந்த ஐபிஎம்மின் வெற்றிக்கு பெரிதும் உதவுவது உயிரி கட்டுப்பாட்டு முறை ஆகும்.
உயிரிப் பூச்சிக்கொல்லிகள்
இயற்கையிலேயே ஒவ்வொரு சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் ஒரு சமநிலை உண்டு. பூச்சிகளுக்கும் அப்படித்தான். பூச்சிகளின் வளர்ச்சியும், பெருக்கமும் அவற்றின் உணவுச்சங்கிலி, இரை விழுங்கி மற்றும் ஒட்டுண்ணி போன்றவற்றைப் பொருத்தே அமையும். உயிரிக் கட்டுப்பாட்டு முறையில், இதன் தொடர்பினை உபயோகித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். ஒரு பூச்சியின் இயற்கை எதிரியினைக் கண்டறிந்து, அதன் உயிரியல் தன்மையைப் படித்து, இனப்பெருக்கம் செய்து, கட்டுப்படுத்த முனையலாம். இந்த முறையில் மிகவும் குறிப்பிட்ட பூச்சியினை மட்டுமே அழிக்க முடியும். பிறகு அதன் உணவு தீர்ந்தவுடன் அழிந்துவிடும். இவை இயற்கை விதிமுறையின் அடிப்படையில் சுற்றுச்சூழல் மாசுபடாமல், பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவாகும் முறையாகும்.
உயிரிப் பூச்சிக்கொல்லிகளென்பது, பயிரைத் தாக்கும் பூச்சிகளின் வாழ்வியலில் புகுந்து அவற்றை அழிக்கும் உயிரினங்கள் ஆகும். ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள் போன்றவை உயிரிப் பூச்சிக் கொல்லிகளாக செயல்படுகின்றன. பூஞ்சாணம், பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நோயை உண்டாக்கும் காரணிகளை இவை அழிக்க வல்லவை. மேலும் இவை மற்ற முறை பூச்சிக் கட்டுப்பாட்டிற்கும் உதவுகின்றன. இயற்கையில் இருக்கும் காரணிகளை உபயோகிப்பதே சிறந்த உயிரிப் பூச்சிக் கட்டுப்பாடாக விளங்குகிறது. இக்காரணிகளை ஆய்வுக்கூடத்தில் பாதுகாத்து, பராமரித்து பெருக்கம் செய்து விளைநிலங்களில் விடலாம். அதன்பிறகு, அப்பூச்சிகள் விளைநிலங்களில் தானாக பெருகி போதிய அளவு வந்தவுடன் பூச்சிக் கட்டுப்பாட்டினை செயல்படுத்த ஆரம்பிக்கும். இவற்றின் செயல்பாடு, இவை பெருகும் திறனையும், உபயோகப்படுத்தும் காலத்தையும் பொருத்தது.
நன்மைகள்
உயிரிப் பூச்சிக்கொல்லிகள் பெரும்பாலும் நச்சுத்தன்மை இல்லாதவை. குறிப்பிட்ட உயிரினத்தை மட்டும் தாக்கி, நன்மை தரும் பூச்சிகளை, மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகள், இரை விழுங்கி, ஒட்டுண்ணிகளைப் பாதுகாக்கும். பூச்சிகளின் இயற்கை எதிரிகளை அதிகரித்து, ரசாயன பூச்சிக்கொல்லியின் உபயோகத்தைக் குறைக்கிறது. சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்றது.