குற்றவழக்கில் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்வர் அமைச்சர்கள் பதவி ரத்து; கூட்டத் தொடர் நாளை முடியும் நிலையில் புதிய மசோதா இன்று தாக்கல்
புதுடெல்லி: பிரதமர், முதல்வர், அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் குற்றவழக்கில் 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களின் பதவியை பறிக்கும் வகையில் புதிய மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மழைக்கால கூட்டத் தொடர் நாளை முடியும் நிலையில் அவசர அவசரமாக இந்த புதிய மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, இதுவரை குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளை மட்டுமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்ற நடைமுறை இருந்து வந்தது.
பொதுவாக, குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அமைச்சர்கள், அரசு நிர்வாகம் சீராக இயங்குவதற்காக கைது நடவடிக்கைக்கு முன்பாகவே தங்கள் பதவியை ராஜினாமா செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த நடைமுறையை மாற்றும் வகையில், கடுமையான குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் தொடர்ந்து 30 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டால், 31வது நாளில் அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பதவி தானாகவே பறிக்கப்படும் என்ற புதிய சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளையுடன் (ஆக. 21) முடிவடைய உள்ள நிலையில், அவசர அவசரமாக ஒன்றிய அரசு புதிய மசோதாவை இன்று தாக்கல் செய்கிறது.
குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்காக கைது செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த புதிய மசோதா பொருந்தும். இதன் மூலம் கொலை, பெரிய அளவிலான ஊழல் போன்ற கடுமையான குற்றங்கள் இந்த சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்படும். இதற்காக அரசியலமைப்பு சட்டத்தின் 75, 164 மற்றும் 239ஏஏ ஆகிய பிரிவுகளில் திருத்தம் கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட பின்னரும், சுமார் ஆறு மாத காலம் சிறையில் இருந்தபடியே டெல்லி அரசை வழிநடத்தினார். இதுபோன்ற நிகழ்வே, இந்த புதிய மசோதா கொண்டு வர முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த முக்கிய மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார்.
இதன்படி, 30 நாட்கள் சிறையில் இருக்கும் அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய பிரதமர், 31வது நாளுக்குள் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு பரிந்துரைக்கத் தவறினால், அடுத்த நாளில் இருந்து அமைச்சர் பதவியை இழப்பார். பிரதமரே 30 நாட்கள் சிறையில் இருந்தால், 31வது நாளுக்குள் அவர் பதவி விலக வேண்டும், இல்லையெனில் அவர் தானாகவே பிரதமர் பதவியை இழப்பார்.யூனியன் பிரதேசங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றில் இதேபோன்ற விதிகள் கொண்டுவரப்படவுள்ளன. இதன்படி, 30 நாட்கள் சிறையில் இருக்கும் அமைச்சரை, முதல்வரின் ஆலோசனையின் பேரில் ஆளுநர் அல்லது துணை நிலை ஆளுநர் பதவி நீக்கம் செய்யலாம். ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து விரைவில் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், இந்த புதிய மசோதாவானது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தைக் குறைத்து, ஒன்றிய அரசின் நிர்வாக அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் உள்ளது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, ‘எதிர்க்கட்சித் தலைவர்களின் கைதுகளுக்கு முறையான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படாத நிலையில், அவர்களைப் பழிவாங்கும் நோக்கில் கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில், கைது செய்யப்பட்ட உடனேயே முதல்வரைப் பதவி நீக்கம் செய்யும் புதிய சட்டம் மிகவும் தவறானது. தேர்தலில் எதிர்க்கட்சி முதல்வர்களைத் தோற்கடிக்க முடியாததால், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி, அவர்களைக் கைது செய்து பதவியில் இருந்து நீக்க ஒன்றிய அரசு திட்டமிடுகிறது’ என்று கடுமையாகச் சாடியுள்ளார். பொதுவாக ஒரு மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக, அதுகுறித்த முன்னறிவிப்பை வழங்க வேண்டும் (விதி 19ஏ), மசோதாவின் நகலை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும் (விதி 19பி) என்பது நாடாளுமன்ற நடைமுறை.
ஆனால், நேரமின்மையைக் காரணம் காட்டி, இந்த விதிகளைத் தளர்த்துமாறு மக்களவைப் பொதுச் செயலாளருக்கு ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தனியாகக் கடிதம் எழுதியுள்ளார். இந்த அவசரக் கோரிக்கையை ஏற்குமாறு அவைத்தலைவர் ஓம் பிர்லாவும் செயலகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, திருத்தப்பட்ட அலுவல் பட்டியலை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் மக்களவைச் செயலகத்திற்கு அனுப்பியுள்ளது. அதன்படியே இந்த புதிய மசோதாவை அவசர அவசரமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.