குற்றவழக்கில் கைதாகி 30 நாள் சிறையில் இருந்தாலே பிரதமர், முதல்வர், அமைச்சர் பதவி நீக்கம்: 3 சட்ட மசோதாக்கள் மக்களவையில் தாக்கல்
* எதிர்க்கட்சிகள் கடும் அமளி; சட்ட நகலை கிழித்து எறிந்தனர், பாஜ அல்லாத மாநிலங்களை குறிவைத்து கொண்டுவந்துள்ளதாக குற்றச்சாட்டு
புதுடெல்லி: குற்ற வழக்கில் கைதாகி 30 நாள் சிறையில் இருந்தாலே பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் அரசியலமைப்பு சட்ட திருத்தம் உட்பட 3 சட்ட மசோதாக்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. பாஜ அல்லாத மாநிலங்களை குறிவைத்து இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி எம்பிக்கள், சட்ட மசோதா நகலை கிழித்தெறிந்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் அரசு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளியால், ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கியது. அமளிக்கு இடையே பல முக்கிய மசோதாக்களை ஒன்றிய அரசு விவாதமின்றி குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றியது.
இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அரசு தரப்பில் நேற்று முக்கிய மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. காலையில், பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதாவை பிற்பகல் 2 மணிக்கு தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி 2 மணிக்கு அவை கூடியதும், இந்த மசோதாவை தாக்கல் செய்ய எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் கோஷமிட்டனர்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, யூனியன் பிரதேச அரசு சட்ட திருத்தம், 130வது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்தம் ஆகிய 3 சட்ட திருத்த மசோதாக்களை தாக்கல் செய்தார். இந்த மசோதாக்களின்படி, பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டால், அவர்கள் 31வது நாளில் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், இல்லாவிட்டால் அவர்களின் பதவி தாமாக பறிக்கப்படும்.
தற்போதுள்ள யூனியன் பிரதேச அரசுச் சட்டம் 1963ல் இதுபோன்ற அம்சங்கள் இல்லை. எனவே, சட்டத்தின் 45வது பிரிவைத் திருத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த மசோதா அரசியலமைப்பிற்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது என எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தன. பாஜ அல்லாத மாநில அரசுகளை சீர்குலைக்க அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுவதாக ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றம்சாட்டினார். இதே கருத்தை வலியுறுத்திய காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, ‘‘குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒரு தனிநபர் நிரபராதி.
இந்த மசோதா நீதிக்கு எதிரானது மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை சிதைக்கிறது. இந்த மசோதா அரசியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்துவதற்கான கதவைத் திறந்து, அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்புகளையும் காற்றில் பறக்கவிடுகிறது’’ என்றார். ஆர்எஸ்பி எம்.பி. என்.கே. பிரேம்சந்திரன், ‘‘இந்த மசோதாக்கள் சபையின் நடைமுறைகளின்படி அறிமுகப்படுத்தப்படவில்லை. இவ்வளவு முக்கியமான மசோதாக்களை உறுப்பினர்களுக்கு கூட வழங்கப்படாத அளவுக்கு, அவற்றைக் கொண்டுவருவதில் இவ்வளவு அவசரம் ஏன்?’’ என கேள்வி எழுப்பினார்.
இதை மறுத்த அமித்ஷா, இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்படும் என்றும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட இரு அவைகளின் உறுப்பினர்களும் தங்கள் ஆலோசனைகளை வழங்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார். இதை ஏற்காத எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு கோஷமிட்டபடி, சட்ட மசோதா நகலை கிழித்து அமித்ஷா முகத்திற்கு நேராக வீசி எறிந்து அமளியில் ஈடுபட்டனர்.
ஆளுங்கட்சி எம்பிக்களும் பதிலுக்கு கோஷமிட்டதால், மக்களவை போர்க்களமாக மாறியது. இதனால் அவை மாலை 5 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மாலை 5 மணிக்கு அவை கூடியதும், அவைக் காவலர்கள் பாதுகாப்புடன், இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை அமித்ஷா அவசர அவசரமாக முடித்து வைத்தார். கடும் அமளிக்கு மத்தியில் இதற்கான தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பீகார் விவகாரத்தை தொடர்ந்து இந்த மசோதா தேசிய அரசியலில் பெரும் எதிர்ப்பை கிளப்பி உள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சி மூத்த தலைவர்கள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்துள்ளனர். எனவே இந்த மசோதா விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* மோதலில் இறங்கிய எம்பிக்கள் மக்களவையில் நடந்தது என்ன?
அமித்ஷா 3 சட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்புவதாக கூறியதுமே, திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் மசோதாவின் நகல்களைக் கிழித்து, அமித்ஷாவை நோக்கி வீசி எறிந்தனர். இதனால் உடனடியாக, ஒன்றிய அமைச்சர்கள் ரவ்னீத் சிங் பிட்டு மற்றும் கிரண் ரிஜிஜூ இருவரும் அமித்ஷா அருகில் வந்து எதிர்க்கட்சி எம்பிக்களை விலகிச் செல்லுமாறு சைகை செய்தனர். அதே சமயம் கோபமடைந்த பாஜ எம்பிக்களும் அவையின் மையப் பகுதிக்குள் நுழைந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தள்ளி விட்டனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே லேசாக கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் பாஜ எம்பிக்கள் விலகி இருக்கைக்கு சென்ற போதிலும், எதிர்க்கட்சி எம்பிக்கள் சட்ட நகல்களை கிழித்து வீசினர். எதிர்க்கட்சி எம்பிக்கள் மேலும் நெருங்குவதைத் தடுக்க அமித்ஷா இருக்கைக்கு முன்னால் அவையின் மையப் பகுதியில் 3 அவைக்காவலர்கள் நிறுத்தப்பட்டனர். பிற்பகல் 3 மணிக்கு அவை கூடிய போது, அமித்ஷா தனது வழக்கமான முன் வரிசை இருக்கைக்கு பதிலாக, பின் வரிசையில் சென்று அமர்ந்து 3 மசோதாக்களையும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு பரிந்துரைக்கும் செயல்முறைகளை முடித்தார்.
* ஊழலுக்கு ஆதரவாக இருப்பதை காட்டுகிறது
பாஜ எம்பி அனுராக் தாக்கூர் கூறுகையில், ‘‘எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் போராட்டம் நடத்திய விதம், அவர்கள் ஊழலுக்கும் ஊழல் செய்பவர்களுக்கும் ஆதரவாக நிற்கிறார்கள், ஊழல் செய்பவர்களைக் காப்பாற்ற எந்த அளவிற்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. எதிர்க்கட்சிகள் எதற்கு எதிராகப் போராடுகின்றன? ஒழுக்கத்திற்கா, ஊழலுக்கா என்ற கேள்வி எழுகிறது’’ என்றார்.
* மக்கள் முடிவு செய்யட்டும்
சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்துவதற்கு ஒரு அமைச்சர், முதல்வர் அல்லது பிரதமர் பொருத்தமானவரா என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்தார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பதிவில், ’ஒருபுறம், பிரதமர் மோடி தன்னை சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவருவதற்காக ஒரு அரசியலமைப்புத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளார்.
மறுபுறம், காங்கிரஸ் தலைமையிலான முழு எதிர்க்கட்சியும் சட்டத்தின் வரம்பிற்கு வெளியே இருக்கவும், அரசாங்கங்களை சிறையில் இருந்து இயக்கவும், அதிகாரத்தில் தங்கள் பற்றுதலை கைவிடாமல் இருக்கவும் அதை எதிர்க்கிறார்கள். இப்போது, ஒரு அமைச்சர், முதலமைச்சர் அல்லது பிரதமர் சிறையில் இருக்கும்போது அரசாங்கத்தை நடத்துவது பொருத்தமானதா என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
* அமைச்சராக இருந்த போது சிறை சென்றவர் அமித்ஷா
மசோதாவை எதிர்த்து பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தபோது அமித்ஷா கைது செய்யப்பட்ட விவகாரத்தை எழுப்பி, அரசியலில் அவரது ஒழுக்கம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அமித்ஷா, ‘‘கைது செய்யப்படுவதற்கு முன்பே தார்மீக அடிப்படையில் பதவியை நான் ராஜினாமா செய்தேன். நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்னரே மீண்டும் பதவி ஏற்றேன். கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் அளவுக்கு நாங்கள் வெட்கம் கெட்டவர்கள் அல்ல’’ என்றார்.
* குற்றவாளி என நிரூபிக்கும் முன்பாக பதவி பறிக்கப்படும்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், ‘‘முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதற்கான புதிய மசோதாக்கள் கொடூரமானவை. ஜனநாயக விரோதமானவை. குற்றவாளி என ஒருவர் நிரூபிக்கப்படும் முன்பாகவே அவரது பதவி பறிக்கப்பட்டுவிடும். இது முற்றிலும் தவறு, மிகவும் துரதிர்ஷ்டவசமானது’’ என்றார்.
* சர்வாதிகாரத்தின் அடையாளம்
மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் எம்ஏ பேபி தனது எக்ஸ் பதிவில், ‘‘ஜனநாயகத்தின் மீதான இந்த நேரடித் தாக்குதலை நாங்கள் தீவிரமாக எதிர்ப்போம். இந்த கொடூரமான நடவடிக்கைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேணடும்’’ என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ஜான் பிரிட்டாஸ், ‘‘அமித் ஷாவின் புதிய மசோதாக்கள் உண்மையில் கொடூரமானது. எதிர்க்கட்சிகள் தலைமையிலான மாநில அரசுகளை சீர்குலைக்கக் கூடியது. இது இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை தகர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது ’’ என்றார்.
சிபிஐ(எம்எல்) லிபரேஷன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா கூறுகையில், ‘‘இந்த மசோதாக்கள் கூட்டாட்சிக்கு சாவு மணி அடிக்கும்’’ என்றார். சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், ‘‘புதிய சட்டங்கள் எதிர்க்கட்சி அரசுகளை அச்சுறுத்துவதையும் அவர்களிடையே அச்சத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த புதிய சட்டங்கள் சர்வாதிகாரத்தை அடையாளப்படுத்துகின்றன’’ என்றார்.
* சூப்பர் எமர்ஜென்சியை விட மிக மோசமானது
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‘‘130வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை வன்மையாக கண்டிக்கிறேன். இது ஒரு சூப்பர்-எமர்ஜென்சியை விட அதிகமான ஒன்றை நோக்கிய ஒரு முயற்சியாக இருக்கிறது. இந்தியாவின் ஜனநாயக சகாப்தத்தை என்றென்றும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு செயல். இந்த கொடூரமான நடவடிக்கை இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சிக்கு சாவு மணி அடிப்பதாக இருக்கிறது’’ என்றார்.
* ஜேபிசி அறிக்கை தாக்கல் எப்போது?
நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டுள்ளது. கூட்டுக்குழுவில் மக்களவையைச் சேர்ந்த 21 உறுப்பினர்களும் மாநிலங்களவையை சேர்ந்த 10 உறுப்பினர்களும் இடம் பெற்றிருப்பார்கள். இவர்கள் மசோதாவில் உள்ள அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தி, மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை அரசுக்கு பரிந்துரைப்பார்கள். அடுத்த அமர்வின் முதல் வாரத்தின் கடைசி நாளுக்குள் அறிக்கையை அவையில் சமர்ப்பிக்க கூட்டுக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வாக குளிர்கால கூட்டத்தொடர் வரும் நவம்பர் 3வது வாரத்தில் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.