திருமங்கலத்தில் காதல் விவகாரத்தில் மொபட் மீது காரை ஏற்றி கல்லூரி மாணவன் படுகொலை
* மற்றொரு மாணவனுக்கு தீவிர சிகிச்சை, 2 பேர் கைது, நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பயங்கரம்
சென்னை: சென்னை திருமங்கலத்தில் நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மொபட்மீது சொகுசு காரை ஏற்றி கல்லூரி மாணவன் படுகொலை செய்யப்பட்டார். இதில் மற்றொரு மாணவன் படுகாயம் அடைந்து, தீவிர சிகிச்சையில் உள்ளார். இதுதொர்பாக, இரண்டு மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் அபிஷேக் (20). கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் நித்தின் சாய் (19), சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இதேபோல் சந்துரு, எட்வின், சுதன், பிரணவ் ஆகிய 4 பேரும் கல்லூரி மாணவர்கள். இந்நிலையில், திருமங்கலம் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவரை, வெங்கடேஷ் காதலித்து வந்துள்ளார்.
காதலுக்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்த நிலையிலும் அவரை பின்தொடர்ந்து டார்ச்சர் செய்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, பிரணவிடம் கூறியுள்ளார். இவர் அந்த மாணவியை காதலித்து வந்துள்ளார். எனவே அவரும், ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று மாணவிக்கு ஆறுதல் கூறி அனுப்பி உள்ளார். இதை தொடர்ந்து, பிரணவ், தான் காதலித்த மாணவியை கல்லூரி மாணவன் வெங்கடேஷ் லவ் பண்ணுவதாக டார்ச்சர் கொடுத்து வருவதாக தனது நண்பர் சந்துருவிடம் கூறியுள்ளார்.
பிறகு இருவரும் செல்போன் மூலம் வெங்கடேஷை தொடர்பு கொண்டு மிரட்டியதுடன் ஆபாசமாக பேசியுள்ளனர். இதுபற்றி வெங்கடேஷ் தனது நண்பர் நித்தின் சாய் மற்றும அபிஷேக்கிடம் கூறியுள்ளார். உடனே பிரணவுக்கு போன் செய்து நித்தின் சாய், அபிஷேக் ஆகியோர், ‘எப்படி என் நண்பரை ஆபாசமாக பேசி திட்டுவாய். தில் இருந்தா திருமங்கலம் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்திற்கு நீ வா, நாங்களும் வர்றோம், நாம் மோதி பாக்கலாம்’ என கூறியுள்ளனர். இந்நிலையில், 3 பேரின் நண்பரான மோகன் என்பவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள்.
அங்கு ‘எதற்காக மாணவிக்கு டார்ச்சர் கொடுத்தாய்’ என்று வெங்கடேஷை தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இறுதியில் ஆத்திரம் அடைந்த சந்துரு, வெங்கடேஷ் கன்னத்தில் பளார் என ஓங்கி அறைந்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் முற்றியது. சிறிது நேரத்தில் மோகன், வெங்கடேஷ் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
அப்போது சொகுசு காரை வேகமாக ஓட்டிச்சென்று வெங்கடேஷ் காலில் ஏற்றி உள்ளனர். இதை பார்த்து பயந்துபோன அபிஷேக், நித்தின் சாய் ஆகியோர் தங்களது பைக்கில் தப்ப முயன்றனர். ஆனால், சொகுசு காரில் வந்தவர்கள் அவர்களையும் விட்டு வைக்காமல் துரத்தினர். இதை பார்த்ததும் அபிஷேக், மொபட்டை வேகமாக ஓட்டினார். இருப்பினும் சொகுசு கார், அசுர வேகத்தில் சென்று மொபட்மீது பயங்கரமாக மோதியதுடன் தள்ளிச் சென்றது. சிறிது தூரத்தில் பள்ளி சுவரில் மொபட்டுடன் மோதியது. இதில் மொபட் நொறுங்கியது.
இந்த சம்பவத்தில் நித்தின் சாய், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அபிஷேக், தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சொகுசு காரை பிடிக்க முயன்றபோது அதிவேகத்தில் தப்பி சென்றது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கற்களை எடுத்து வீசினர். இதில் கார் கண்ணாடி உடைந்தது. இருப்பினும் சொகுசு கார் மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது. படுகாயம் அடைந்த அபிஷேக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 16 தையல் போடப்பட்டுள்ளது.
தகவலறிந்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்தவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என வழக்குபதிவு செய்து முதலில் விபத்து என வழக்கு பதிவு செய்தனர். பிறகு விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தபோது திட்டமிட்ட கொலை என தெரிய வந்தது.
பிறகு இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி திருமங்கலம் சட்டம்-ஒழுங்கு போலீசார் விசாரித்தனர். பிரணவ் மற்றும் சுதன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க அண்ணாநகர் துணை ஆணையர் உதயகுமார் தலைமையில் 6 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்துரு கே.கே.நகரை சேர்ந்தவர். இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் நித்தின் சாய் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
* உறவினர்கள் முற்றுகை
திருமங்கலம் காவல் நிலையத்தை நித்தின் சாய் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை முற்றுகையிட்டனர். அப்போது கொலைக்கு காரணமான சந்துரு, ஆருண், எட்வின் ஆகிய 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என்றனர். இதுபோல, மற்றொரு தரப்பினர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என போலீசார் கூறினர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
* திட்டமிட்டே கொன்றுள்ளனர் நித்தின் சாய் தந்தை கதறல்
சென்னையில் ஒரு தனியார் கம்பனியில் வேலை செய்து வரும் நித்தின் சாயின் தந்தை சுரேஷ் கூறுகையில், ‘‘எனது மகன் நித்தின் சாய் மற்றும் ஒரு மகள் உள்ளார். சம்பவம் நடந்த அந்த இரவு அண்ணாநகரில் உள்ள அவரது நண்பர் மோகன் என்பவருக்கு பிறந்த நாள் என்று கூறிவிட்டு சென்றான். வர தாமதமானதால் போன் செய்தபோது, கண்டிப்பாக வீட்டுக்கு வந்து விடுவேன் என்று அவன் பேசியதுதான் கடைசி.
ஆனால் சற்று நேரத்தில், உங்களது மகன் இறந்து விட்டார் என திருமங்கலம் போக்குவரத்து போலீசார் போன் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு சொகுசு கார் விரட்டி சென்று மொபட் மீது மோதியதாக எனக்கு தகவல் வந்தது. எனவே எனது மகனை திட்டம் போட்டு கொலை செய்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கதறினார்.