கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வாலிபரிடம் விடிய விடிய விசாரணை: போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு
கும்மிடிப்பூண்டி: ஆரம்பாக்கம் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நேற்றிரவு சம்பந்தப்பட்ட வடமாநில வாலிபரை சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்திய பிறகு கவரப்பேட்டை காவல் நிலையத்தில் 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் விசாரணை நடந்தது. கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம், செல்லியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 4ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி, கடந்த 12ம் தேதி மாலை பள்ளியில் இருந்து தனது பாட்டி வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பின்தொடர்ந்த ஒரு வடமாநில வாலிபர், அந்த சிறுமியை தூக்கி சென்று, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடி விட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு பொன்னேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புகாரின்பேரில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் வடமாநில வாலிபர் குறித்து விசாரித்து வந்தனர். வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்களும் அரசியல் கட்சியினரும் காவல்நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 10 நாட்களுக்கு மேல் விசாரணை நடந்த நிலையில், சம்பந்தப்பட்ட வடமாநில வாலிபர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் டிஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சுமார் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும், ஆந்திர மாநிலமான சூலூர்பேட்டை, நெல்லூர், குண்டூர் மற்றம் புறநகர் பகுதி ரயில்களில் தனிப்படை போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை நெல்லூர் செல்லும் மின்சார ரயிலில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய வடமாநில வாலிபரின் முகஜாடையில் இருப்பவர் கஞ்சா போதையுடன் ஏறுவதை தனிப்படை போலீசார் கண்காணித்தனர். அந்நபருடன் தனிப்படை போலீசார் ரயிலில் பயணம் செய்து, அவரது உருவத்தை செல்போனில் படம்பிடித்து, கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி உறுதி செய்தனர். இதற்கிடையே சூலூர்பேட்டையில் ரயில் நின்றதும், அந்த வாலிபர் கீழே இறங்கி, அங்குள்ள பெட்டிக் கடை அருகே அமர்ந்தபோது, தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து ஆரம்பாக்கம் காவல்நிலைய விசாரணைக்கு அழைத்து வந்தனர். இதையறிந்ததும் ஏராளமான கிராம மக்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் அந்த வடமாநில வாலிபரை காரில் ஏற்றி சென்று, ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், அவர் சூலூர்பேட்டையில் ஒரு ஓட்டலில் வேலை செய்தபடி, கஞ்சா போதையில் ஆரம்பாக்கம், அக்கம்மாபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்து, தனியே செல்லும் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு மண்டல டிஐஜி அஸ்ரா கார்க் கூறுகையில், சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நபர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கைதான வாலிபரிடம் டிஎஸ்பிக்கள் தலைமையில் விசாரணை நடைபெறும் என்றார். இந்நிலையில், கைதான வாலிபரிடம் கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் இன்று காலை கவரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் போக்சோ வழக்கு உள்பட மேலும் 3 குற்றப்பிரிவுகளின்கீழ் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கைதான வடமாநில வாலிபரிடம் தனிப்படை போலீசார் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தினர்.இதில் அவர், சிறுமியை வன்கொடுமை செய்ததை ஒப்பு கொண்டதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று காலை டிஎஸ்பிக்களின் விசாரணையும் தொடர்ந்து வருகிறது. இதில், கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி தனியே வசித்து வருகிறார் என்பது தெரியந்துள்ளது. மேலும் இவர், இதுபோன்று வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா, அசாம் மாநிலத்தில் அவர் மீது வேறு ஏதேனும் வழக்கு உள்ளதா என்பது குறித்து சென்னை டிஜிபி அலுவலகம் வாயிலாக அசாம் மாநில டிஜிபிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வாலிபரின் குடும்பத்தினரிடம் அசாம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று போலீசார் எதிர்பார்ப்பில் உள்ளனர். வாலிபர் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.