ரூ.3.24 கோடி கொள்ளை: பாஜ நிர்வாகிகள் கைது
கண்டெய்னர் லாரியிலிருந்து ரூ.3.24 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக லாரி டிரைவர் ஆலப்புழா மாவட்டம் கரீலகுலங்கரா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பூரை சேர்ந்த திருகுமார் (37), சந்திரபோஸ்(32) ஆகிய இருவரையும் கடந்த மாதம் 22ம் தேதி போலீசார் கைது செய்தனர். ஒரு இனோவா காரினை பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக இருவரிடம் நடத்திய விசாரணையில், பாஜ ஓபிசி அணி மாநில பொதுக்குழு உறுப்பினரான திருவாரூரை சேர்ந்த துரையரசு மற்றும் நன்னிலத்தை சேர்ந்த முன்னாள் இளைஞரணி மாவட்ட பொது செயலாளரும், கும்பகோணத்தில் விளையாட்டு பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருபவருமான சதீஷ் ஆகிய இருவரும் கொள்ளையடிப்பதற்கான திட்டத்தினை வகுத்து கொடுத்தது தெரியவந்தது.
மேலும், கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களில் மற்றொரு ஸ்கார்பியோ காரானது, திருவாரூர் நேதாஜி சாலையில் மெஸ் நடத்தி வருபவரும், திருவாரூர் பாஜ நகர இளைஞர் அணி முன்னாள் பொதுசெயலாளரான ஸ்ரீராம் (29) என்பவருடையது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நிஜாமுதீன் தலைமையிலான கேரள தனிப்படை போலீசார் நேற்று மதியம் திருவாரூர் வந்தனர்.
பின்னர் சேந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீராம் வீட்டிற்கு சென்ற போலீசார், வீட்டில் இருந்த அவரை கைது செய்து, அவர் பயன்படுத்தி வந்த ஸ்கார்பியோ காரையும் பறிமுதல் செய்து கேரளாவிற்கு கொண்டு சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் பாஜ ஓபிசி அணி மாநில பொதுக்குழு உறுப்பினர் துரையரசு, கரீலகுலங்கரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சதீஷ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.