பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் கேரள சிறையில் இருந்து தப்பிய தமிழக வாலிபர்: கிணற்றில் பதுங்கியவரை போலீசார் பிடித்தனர்
சிறையில் இருந்து கோவிந்தசாமி தப்பியது குறித்து சமூக வலைதளங்களிலும் டிவியிலும் படத்துடன் செய்தி வரத் தொடங்கியது. காலை 9 மணியளவில் கண்ணூர் தளாப் பகுதியில் கோவிந்தசாமியை வினோஜ் என்பவர் பார்த்துள்ளார். உடனே கோவிந்தசாமி என்று பெயர் சொல்லி வினோஜ் அழைத்ததும் ஓட்டம் பிடித்தார். இது பற்றி போலீசுக்கும் வினோஜ் தகவல் கொடுத்தார். இதையடுத்து, அந்த பகுதியில் போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் பாழடைந்த வீட்டின் பின்புறம் உள்ள ஒரு கிணற்றுக்குள் கோவிந்தசாமி பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கயிற்றை கிணற்றுக்குள் வீசி அதில் ஏறி வருமாறு கூறி கோவிந்தசாமியை போலீசார் கைது செய்தனர்.
பிடிபட்ட கோவிந்தசாமியிடம் கண்ணூர் போலீஸ் கமிஷனர் நிதின் ராஜ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவரை போலீசார் கண்ணூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று சிறையில் இருந்து தப்பித்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தினர். கோவிந்தசாமியை போலீசார் திருச்சூர் மத்திய சிறைக்கு மாற்ற தீர்மானித்துள்ளனர். இதற்கிடையே பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கண்ணூர் சிறை ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.