ஐடி ஊழியர் ஆணவ கொலை காதலி சுபாஷினியிடம் 2 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் மகன் கவின் செல்வகணேஷ் (27). இவர் சென்னையிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரும் பாளை கேடிசி நகரை சேர்ந்த பட்டாலியன் போலீசில் எஸ்ஐக்களாக பணியாற்றி வரும் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி தம்பதியின் மகள் சித்தா டாக்டர் சுபாஷினியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை 27ம் தேதி பாளை கேடிசி நகருக்கு தாத்தாவுடன் வந்த கவின் செல்வகணேஷை, சுபாஷினியின் தம்பி சுர்ஜித் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிந்து சுர்ஜித், எஸ்ஐ சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.
இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை அலுவலகத்திற்கு வருமாறு சுபாஷினிக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று நேரில் ஆஜரான சுபாஷினியிடம், சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார் நவ்ரோஜ், இன்ஸ்பெக்டர் உலகராணி ஆகியோர் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கவின்செல்வகணேஷை நெல்லைக்கு வரவழைத்தது யார்?, இந்த கொலையில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? உட்பட பல்வேறு கேள்விகளை சிபிசிஐடி போலீசார் கேட்டனர். இதற்கு சுபாஷினி அழுது கொண்ட பதிலளித்துள்ளார். இதனிடையே கைதான சுர்ஜித், எஸ்ஐ சரவணன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நாளை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
சுர்ஜித்துக்கு காவல் நீட்டிப்பு
ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் ஆணவக்கொலை வழக்கு நெல்ைல மாவட்ட 2வது கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் கைதான சுர்ஜித்தின் நீதிமன்றக்காவல் நேற்றுடன் முடிவடைந்தது. மேலும் இந்த வழக்கு போலீசாரிடமிருந்து சிபிசிஐடி போலீசாருக்கு வழக்கு கைமாறியது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் பாதுகாப்பு கருதி சுர்ஜித் நேற்று நீதிமன்ற விசாரணைக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி செல்வம், சுர்ஜித்துக்கு வருகிற 14ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். சுர்ஜித்தின் தந்தை சரவணன் வருகிற 8ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் இருக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.