லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்கள் கைது
மதுரை: லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்கள் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், நல்லகுற்றாலம் தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன் (48). இவர் தனக்கு வில்லிபுத்தூர் சிங்கம்மாள்புரம் கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்கு அனுமதி கோரி, வில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் கட்டிட அமைப்பு வரைவு ஆய்வாளர் ஜோதிமணியிடம் (56) மனு செய்தார். அப்போது ஜோதிமணி தனக்கு ரூ10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வாசுதேவன், விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனையின்பேரில் ஜோதிமணியிடம் லஞ்ச பணத்தை வாசுதேவன் வழங்கினார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜோதிமணியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தை சேர்ந்தவர் முகமது பிலால். இவர் தனது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பியை மாற்றி அமைப்பதற்காக, தேவிப்பட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் மனு செய்து ரூ42,900 கட்டணம் செலுத்தினார். ஆனால், அங்கு பணியாற்றும் வணிக ஆய்வாளர் ரமேஷ்பாபு வேலையை சீக்கிரம் முடிக்க உதவி மின்பொறியாளருக்கு ரூ3 ஆயிரம், லேபருக்கு ரூ6 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து முகமது பிலால் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனையின்பேரில் ரூ9 ஆயிரம் பணத்தை வணிக ஆய்வாளர் ரமேஷ்பாபு மற்றும் வயர்மேன் கந்தசாமி ஆகியோரிடம் முகமது பிலால் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.