தாவணகெரேவில் கள்ளநோட்டு புழக்கம்: 4 பேர் கைது
மாநிலத்தின் தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தாலுகா, சிரடோணி கிராமத்தில் உள்ள பார் ஒன்றில் இருவர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பசவபட்டன போலீசார், திடீர் சோதனை நடத்தினர். இதில் சந்தோஷ்குமார் (32) மற்றும் வீரேஷ் (37) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி மேலும் இருவர் கள்ள நோட்டுகளை தொட்டபேட்டை பகுதியில் புழக்கத்தில் விட்டு வருவது தெரியவந்தது. போலீசார் நடத்திய சோதனையில் குபேரப்பா (60) மற்றும் அனுமந்தப்பா (75) ஆகிய இருவரை கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் குக்காவாட் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் குபேரப்பா வைத்திருந்த போலி ரூ.500 நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர், மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேற்கண்ட நான்கு பேரிடமிருந்தும் ரூ.500 மற்றும் 200 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தாவணகெரே மாவட்ட போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.