கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கியவர்; மதுரை சிறை அதிகாரி, நாகூர் சயீதா கொலையில் டெய்லர் ராஜா கைது: காவலில் விசாரிக்க போலீஸ் திட்டம்
கோவையில் கடந்த 1998 பிப்ரவரி 14ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கோவையை சேர்ந்த சாதிக் என்கிற டெய்லர் ராஜாவை, கடந்த 9ம் தேதி கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் கைது செய்தனர். அவரை, கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து, 5 நாள் காவலில் எடுத்து, போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், கடந்த 21ம் தேதி டெய்லர் ராஜாவை மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
டெய்லர் ராஜா மீது, குண்டுவெடிப்பு வழக்கு மட்டுமின்றி வேறு பல வழக்குகளும் நிலுவையில் உள்ளன. 1996ம் ஆண்டு கோவையில் பெட்ரோல் குண்டு வீசியதில் ஜெயிலர் பூபாலன் உயிரிழந்த வழக்கு, அதே ஆண்டு நாகூரில் சயீதா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு, 1997ம் ஆண்டு மதுரையில் சிறை அதிகாரி ஜெயபிரகாஷ் கொலை செய்யப்பட்ட வழக்கு ஆகியவையும் நிலுவையில் உள்ளன. கடந்த வாரம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோது, டெய்லர் ராஜா இதை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் டெய்லர் ராஜாவை, மதுரை மற்றும் நாகூர் ஆகிய இரு கொலை வழக்கில் நேற்று கைது செய்தனர்.
இதற்கான உத்தரவை கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். மேலும், இவ்விரு வழக்கிலும் டெய்லர் ராஜாவை, காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.