சென்னையில் குழந்தைகளை விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த வித்யா என்ற பெண் கைது..!!
சென்னை: சென்னையில் குழந்தைகளை விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த வித்யா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் குழந்தை கடத்துவதாக புழல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் குழந்தை கடத்தலில் உறுதுணையாக செயல்பட்ட வித்யா என்ற பெண்ணை புழல் போலீசார் கைது செய்தனர். வித்யாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த குழந்தையின் பெற்றோர் தனது இரண்டரை வயது குழந்தையை விற்பனைக்கு கொடுத்ததாக தெரிவித்தார்.
இந்த தகவலின் அடிப்படையில் புழல் தனிப்படை போலீசார் குழந்தையின் பெற்றோரை கைது செய்வதற்காக விரைந்துள்ளனர். வித்யா இடைத்தரகராக எவ்வளவு குழந்தைகளை விற்பனை செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இடைத்தரகராக செயல்பட்டபோது இவர் குழந்தைகள் மூலமாக எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளார் என்பது தொடர்பாக புழல் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குழந்தையை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்பதன் அடிப்படையில் சென்னையில் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக கொளத்தூர் துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.