தொழிலதிபருக்கு ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக ரூ.5 கோடி கமிஷன் பெற்று மோசடி செய்த வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது: டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
அப்போது தொழில் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடி கடன் தேவைப்படுவதாக தொழிலதிபர் திலீப் பத்வானி, பவர் ஸ்டாரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் தனக்கு வங்கி அதிகாரிகள் மற்றும் கடன் கொடுக்கும் தொழிலதிபர்கள் பலர் தெரியும் என்று கூறியுள்ளார். அதை நம்பி டெல்லி தொழிலதிபர் பவர் ஸ்டார் சீனிவாசனிடம் கடன் வாங்க உதவி செய்யும்படி கூறியுள்ளார். அதற்கு பவர் ஸ்டார் கடன் பெற்று தந்தால் ஒரு சதவீதம் கமிஷன் தர வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி ரூ.1000 கோடி கடன் பெற்று தந்தால் ரூ.10 கோடி கமிஷன் தருவதாக டெல்லி தொழிலதிபர் உறுதியளித்துள்ளார். அதன்படி முதற்கட்டமாக கடன் பெற்று தருவதற்கு முன்பு ரூ.5 கோடி பணத்தை பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி தொழிலதிபரிடம் பெற்றுள்ளார்.
ஆனால் சொன்னபடி பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி தொழிலதிபருக்கு கடன் பெற்று தரவில்லை. அதேநேரம் ஆந்திரா, சென்னை, பெங்களூரு தொழிலதிபர்களுக்கு கடன் பெற்று தருவாக ரூ.20 கோடி முதல் ரூ.5 லட்சம் வரை முன்பணம் பெற்று ஏமாற்றிய வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல் டெல்லி தொழிலதிபர் கவனத்திற்கு வந்தது. உடனே அவர் டெல்லி காவல் ஆணையர் அலுவலகத்தில் பவர் ஸ்டார் மீது புகார் அளித்தார். புகார் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பவர் ஸ்டார் டெல்லி தொழிலதிபரிடம் ரூ.5 கோடி கடன் பெற்றது உறுதியானது. அதைதொடர்ந்து அவரை டெல்லி போலீசார் கடந்த 2018ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த பவர் ஸ்டார் சீனிவாசன் பிறகு வழக்கு தொடர்பான எந்த விசாரணைக்கும் நேரில் ஆஜராகாமல் இருந்து வந்தார். அதை தொடர்ந்து மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி நீதிமன்றம் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, புதுடெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில் வசித்து வந்த பவர் ஸ்டார் சீனிவாசனை அதிரடியாக கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை போலீசார் டெல்லிக்கு அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணம் மோசடி தொடர்பாக 6 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.