கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக்கோரி ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: தனக்கு எதிராக 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.
இதன்மூலம் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, 2014ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில், தோனியின் வழக்கை நிராகரிக்க கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி சாட்சி விசாரணை தொடங்கியுள்ள நிலையில், இந்த மனுவை ஏற்றுக் கொண்டால் பிரதான வழக்கு முடிவுக்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஜோதிராமன் அமர்வு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.