கெத்து காட்டும் கிரேட் பால் சப்போட்டா!
பழமரங்களில் சில வகை மரங்கள் அவற்றுக்குத் தோதான மண்ணில்தான் வளர்ந்து பலன் தரும். ஆனால் பலவகை மண்ணுக்கு ஏற்ற சில மரங்களும் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது சப்போட்டா மரம். ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் இதை நடவு செய்து விளைச்சல் பார்க்கலாம். அந்த வகையில் வெயில் வாட்டி எடுக்கும் வேலூர் மாவட்டத்தின் பள்ளிகொண்டா அருகே உள்ள கொல்லமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் கடந்த 10 வருடமாக சப்போட்டா சாகுபடியில் சரியான விளைச்சல் எடுத்து வருகிறார். அவரது சப்போட்டா சாகுபடி அனுபவத்தை அறிய ஒரு காலைப்பொழுதில் கொல்லமங்கலத்திற்கு சென்றோம். நம்மை வரவேற்றுப் பேச ஆரம்பித்தார். ``10 வருடத்திற்கு முன்பு தோட்டக் கலைத்துறை மூலம் நிலத்தின் சிட்டாவை வைத்து பர்கூரில் இருந்து பால் சப்போட்டா, கிரேட் பால் ரக சப்போட்டா செடிகளை வாங்கி வந்து ஒரு ஏக்கரில் நடவு செய்தேன். 10 மீட்டர் இடைவெளியில் செடிகளை நடவு செய்து அதன் நடுவே ஊடுபயிராக 40 மாங்கனி செடிகளை நடவு செய்தேன். நடவு செய்த பின்னர் ஆண்டுக்கு ஒருமுறை இயற்கை எருவான ஆடு, மாட்டு சாண எருக்களை இட்டு 2 முறை ஏர் உழவு செய்தேன். அதன்பிறகு 2 வருடத்தில் மரமாக வளர்ந்து பூக்கள் பூத்து பிஞ்சுகள் விடத்தொடங்கியது. அந்த சமயத்தில் கூலி ஆட்களை வைத்து சுத்தம் செய்தோம். அப்போதே செடிகள் காய்க்கத் தொடங்கிவிட்டன. இருந்தபோதும் காய்களை வளர விடாமல் கவாத்து செய்து அடுத்த ஒரு வருடம் காத்திருந்து விளைச்சல் எடுத்தோம். இவ்வாறு செய்தால்தான் மரம் நன்றாக வளர்ந்து விளைச்சலைக் கூடுதலாக தரும். அதுமட்டுமில்லாமல் மரத்தின் ஆயுட் காலமும் அதிகரிக்கும்.
சரியாக 3ம் வருடத்தில் அறுவடை செய்யத் தொடங்கி ஆண்டுக்கு 3 முறை அறுவடை செய்கிறோம். முதல் 5 வருடத்தில் மரத்திற்கு 150 முதல் 200 கிலோ என விளைச்சல் கிடைத்தது. ஆண்டுக்கு 7லிருந்து 9 டன் வரை அறுவடை செய்கிறோம். தண்ணீர், உரம், பராமரிப்பு முறைகளைப் பொறுத்து விளைச்சலில் சற்று மாற்றமிருக்கும். கிட்டத்தட்ட 10 வருடமாக சப்போட்டா விளைச்சலை சாகுபடி செய்து நேரடி விற்பனை செய்து வந்தேன். வயது மூப்பின் காரணமாக இந்த வருடம் விளைச்சலை குத்தகைக்கு விட்டுவிட்டேன். வயது மூப்பால் அறுவடை மட்டுமே குத்தகைக்கு விட்டாலும், எனது மனைவியுடன் சேர்ந்து எருவிடுதல், ஏர் உழுதல், நிலத்தை பண்படுத்துதல் என அனைத்துப் பணிகளையும் செய்து வருகிறேன்.சப்போட்டா விளைச்சலானது பெரும்பாலும் தை, மாசி மாதத்தில் ஒருமுறையும் சித்திரை, வைகாசியில் ஒருமுறையும் இருக்கும். சாகுபடி முடிந்த பிறகு எருவிட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அந்த சமயத்தில் கோடை மழை கை கொடுத்தால் உண்டு. இல்லையென்றால் கிணற்றுப் பாசனம் மூலம் 2,3 தடவை நீர் பாய்ச்சினாலே போதுமானது. 3 வருடமானாலும் தண்ணீர் இல்லாமல் சப்போட்டா மரம் உயிரோடு இருக்கும்.
பொதுவாக சப்போட்டோவினை காயாக உள்ளபோதே அறுவடை செய்ய வேண்டும். 80 சதவீதம் பழமாக மாற தொடங்கிவிட்டால் காற்றுக்கு விழுவது மட்டுமில்லாமல் தானாகவே விழத்தொடங்கி பழங்கள் சேதமாகி விடும். காய் பழமாகும் சமயத்தில் புள்ளிகள் விழுந்தால் அதில் புழு பூச்சிகள் நுழைய தொடங்கிவிடும். மாதக்கணக்கில் மழை தொடர்ந்து பெய்தால் மருந்து அடிப்பது மிக அவசியம். அறுவடை செய்த சப்போட்டாவினை சென்னை கோயம்பேடு மார்க்கெட், வேலூர் நேதாஜி மார்க்கெட், திருப்பத்தூர் மார்க்கெட் என தமிழகத்தில் உள்ள மார்க்கெட்களிலும் கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் உள்ள மார்க்கெட்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கிறேன். தை, மாசி மாத அறுவடையில் சுமார் 6 டன் சப்போட்டாக்களை கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகாவிற்கு அனுப்பி வைப்பேன். அதன்பின் 2வது அறுவடையில் சென்னை, வேலூர் மார்க்கெட்களுக்கு அனுப்புவேன். அதில் ரகம் வாரியாக 10, 15, 25 என தரத்திற்கு ஏற்றவாறு நல்ல விலை கிடைக்கிறது. கிரேட் பால் சப்போட்டா பெரும்பாலும் குளிர்பானத்திற்காக அண்டை மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. பால் சப்போட்டா பழங்கள் உண்பதற்கு மிகவும் ருசியாக இருப்பதால் சென்னை, வேலூர் போன்ற மார்க்கெட் வியாபாரிகள் விரும்பி வாங்கி செல்கிறார்கள்.
தை மாதம் முதல் வைகாசி மாதம் வரை 15 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யப்படும் சப்போட்டாக்கள் காய் பக்குவத்திலிருந்து பழமாக மாறும் நிலையில் அதாவது மஞ்சள் நிறமாக மாறி வரும்போது அறுவடை செய்ய வேண்டும். மரத்தில் உள்ள கிளைகளில் ஒரு கொத்தில் 5 லிருந்து 10 காய்கள் இருக்கும். அதில் பக்குவம் வந்த காய்களை மட்டுமே பறிக்க வேண்டும். பெரும்பாலும் மரத்தின் மீது ஏறியும், வலைகளை பயன்படுத்தியும் சப்போட்டாக்களை சேதமாகாமல் பறிக்க முடியும். வறட்சியிலும் தாங்கி நிற்கும் இந்த சப்போட்டா விவசாயத்தைக் கையிலெடுத்தால் கனகச்சிதமான லாபத்தைப் பார்க்கலாம்’’ என உறுதிபடக்கூறுகிறார்.
தொடர்புக்கு:
மகாலிங்கம்: 90253 88360.
அளவில் சற்று சிறிதாக தோற்றமளிக்கும் பால் சப்போட்டா பழங்கள் உண்பதற்கு மிகவும் ருசியானவை. இவற்றைச் சென்னை மற்றும் வேலூர் மார்க்கெட் வியாபாரத்திற்காக வாங்கிச் செல்கிறார்கள்.
சற்று பெரிய அளவில் உள்ள கிரேட் பால் சப்போட்டா பழங்களில் சதைப்பற்று அதிகளவில் இருக்கும். இவை குளிர்பானத் தயாரிப்புக்காக கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.