7 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினை பொக்கிஷம் விருது: 10 பேருக்கு பூம்புகார் மாநில விருது, முதல்வர் வழங்கினார்
சென்னை: வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 7 சிறந்த கைவினைஞர்களுக்கும் மற்றும் பூம்புகார் மாநில விருதுகளை 10 சிறந்த கைவினைஞர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் 2024-25ம் ஆண்டிற்கான “வாழும் கைவினைப் பொக்கிஷம்’’ விருதுகளை - கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணி வின்சென்ட் (இயற்கை நார் பொருட்கள்) தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீழிநாதன் (உலோக தகட்டு வேலை),
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளவரசி சொக்கர் (மியூரல் ஓவியம்), திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குப்பு சுப்பிரமணி (கற்சிற்பம்), கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ரமணி (துணி பொம்மைகள்), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பூவம்மாள் (சித்திரத்தையல்) மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த துரைராஜ் (மரச்சிற்பம்) ஆகிய 7 விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்கான ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
மேலும், 2024-25ம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதுகளை - தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் (பஞ்சலோகசிற்பம்) மற்றும் ரமேஷ் (தஞ்சாவூர் ஓவியம்), சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி (தஞ்சாவூர் ஓவியம்), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (மரச்சிற்பம்), கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (மரச்சிற்பம்), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (சுடு களிமண் சிற்பம்),
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ரஹ்மத் மீராள் பீவி (பாய் நெசவு), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ குமாரி (இயற்கைநார் பொருட்கள்), சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மேகன்டூ (ஆணி நூல் கலை) மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல்நாத் (நெட்டி வேலை) ஆகிய 10 கைவினைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பூம்புகார் மாநில விருதிற்கான தலா 4 கிராம் தங்கப் பதக்கம், 50 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத்தொகை, தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.