பட்டாசு வரலாறு தெரியுமா?
தீபாவளி முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனாலும் அங்கொன்றும், இங்கொன்றும் பட்டாசு சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இந்த சப்தம் அப்படியே தொடர்ந்து கார்த்திகை, புத்தாண்டு இரவு வரை நீடிக்கும். பண்டிகை, திருவிழா, பிறப்பு, இறப்பு என எங்கும் நம் மகிழ்ச்சியை வெளி உலகுக்குத் தெரிவிக்கும் முக்கிய கருவி பட்டாசுதான். அப்படிப்பட்ட பட்டாசு எங்கே எப்படி உருவானது தெரியுமா?!. இன்றும் உலகில் பட்டாசு வர்த்தகத்தில் முதலிடம் பிடிக்கும் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது, ‘குட்டி ஜப்பான்’ என்றழைக்கப்படும் சிவகாசி. இந்த பட்டாசு அறிமுகப் படுத்துயது யார் தெரியுமா? பட்டாசு என்பது முதன் முதலான சீனாவின் கண்டுபிடிப்பு எனச் சொல்லப்படுகிறது. அந்த நாட்டில், பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட (உப்பு) பொட்டாசியம் நைட்ரேட் அதிக அளவில் இருந்தது. அது ஒரு முறை தவறுதலாக நெருப்பில் படும்போது தீ ஜுவாலை ஏற்பட்டதாகவும், அதை கொஞ்சம் மேம்படுத்தியே சீனர்கள் பட்டாசை முதலில் உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. உலகத்தில் முதன் முதலாக சீனர்கள் மூங்கில்களையும், மரத்துண்டுகளையும், வெடி மருந்தையும் கொண்டு வானில் சீறிப்பாய்ந்து சென்று வெடிக்கும் வாணங்களை உருவாக்கினர். ஏப்ரல் 18 ஐ பட்டாசு கண்டுபிடிக்கப்பட்ட நாளாக சீனாவில் கொண்டாடுகின்றனர். அதன் பின்னர் சீனாவுக்கு வந்து சென்ற ஆராய்ச்சியாளர்கள் பலர் இதை அறிந்துகொண்டு தங்கள் நாடுகளில் பரப்பினார்களாம். அதன்பிறகு 1279ல் சீனாவில் ஊடுருவிய மங்கோலியர்கள் இந்த தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டனர். அரேபியர்கள் 7 ஆம் நூற்றாண்டில் ராக்கெட்டுகளை சீன அம்புகள் என்று குறிப்பிட்டு பயன்படுத்தி வந்தனர்.
1240 ஆம் ஆண்டில் அரேபியர்கள் வெடிமருந்துகள் குறித்து அறிய முயன்றுள்ளனர். ஹசன் அல் ரம்மா என்பவர் சீனர்களிடமிருந்து வெடிமருந்துகள் பற்றிய தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டு பட்டாசுகள் குறித்து எழுதியுள்ளார். இத்தாலிய பயணி மார்கோபோலோ இந்த தொழில்நுட்பத்தை ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றார் என்கிறார்கள். சிலுவைப் போர்களைத் தொடர்ந்து 1300களில் ஐரோப்பாவில் பட்டாசுகள் அறிமுகமாயின.தற்போது நாம் பயன்படுத்தும் வண்ணமயமான பட்டாசுகள் தயாரிப்பு 1830 ல் துவங்கியது என்கிறார்கள். பல்வேறு வேதிப் பொருட்களை பயன்படுத்தி இத்தாலியர்கள் வண்ணமயமான பட்டாசுகளை தயாரித்தனர்.
இந்தியாவில் பட்டாசு அறிமுகம்
1922 ல் கல்கத்தாவில் ஜப்பானை சேர்ந்த சிலர் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இந்தியாவிலேயே கல்கத்தாவில் மட்டுமே தீப்பெட்டி தயாரிப்பு தொழில் நடைபெற்று வந்தது.அப்போது சிவகாசியிலிருந்து பி. ஐயன், ஏ. சண்முகம் ஆகியோர் தீப்பெட்டி தொழிலை கற்றுக்கொள்ள கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டனர். தொழிலைக் கற்பதற்காக கொல்கத்தா சென்றவர்கள் அங்கேயே 6 ஆண்டுக்காலம் தங்கி தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தயாரிப்புகளைக் கற்றுக்கொண்டார்கள்.பின்னர் இவர்கள் சிவகாசி திரும்பி 1928-இல் தீப்பெட்டி தொழிற்சாலையை உருவாக்கினர். அதன் பின்னர் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது.1940-ம் ஆண்டுக்குப் பிறகுதான் சிவகாசியில் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.இன்றுவரை இந்தியாவில் 90 விழுக்காடு பட்டாசு தயாரிப்பு சிவகாசியில் மேற்கொள்ளப்படுகிறது.
பட்டாசு விற்பனை பாதிப்பு
தற்போது மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக பட்டாசு விற்பனை குறைந்துள்ளது என்கிறார்கள். காற்று மாசுபாடு மற்றும் சுற்று சூழல் குறித்த விதிமுறைகள் பட்டாசு பயன்பாடு குறைய மற்றொரு காரணம் உச்சநீதிமன்ற விதித்த கட்டுப்பாடுகள், நேரக்கட்டுப்பாடுகளும் பட்டாசு விற்பனை பெருமளவு சரிய காரணமென்கிறார்கள்.
உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள்:
பட்டாசுத் தொழிலை நம்பி எட்டு லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் உள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடியாது.
* பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வரவேண்டும்.
* தீபாவளியன்று, இந்தியா முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.
* அதிக சத்தம், அதிக புகைவரும் பட்டாசுகளைத் தயாரிக்க கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
* ஆன்லைன் மூலமாக பட்டாசுகளை விற்கக்கூடாது.
* உரிமம் இல்லாதவர்கள் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது.
* பட்டாசு விவகாரத்தில் விதிமுறைகளை மீறுவோர்மீது அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பட்டாசு வெடிப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பட்டாசு கடைகள் வைக்க விதிமுறைகள்
*பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோர் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி தான் கடைகள் அமைக்க வேண்டும்.
*தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விற்பனை செய்ய விரும்புபவர்கள் தீயணைப்பு துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
*கடைகளில் தீயணைப்பு சாதனங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
*ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் கட்டாயம் இடைவெளி இருக்க வேண்டும் என்பது போன்ற 30 விதிகள் தீயணைப்பு துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
*30 விதிகளை முறையாக பின்பற்றி பட்டாசு கடைகள் அமைக்க முன் வரும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
*பட்டாசு கடைகள் அமைக்கும் இடத்திற்கு தீயணைப்பு அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
*திருமண மண்டபம், அடுக்குமாடி குடியிருப்பு, பெட்ரோல் மற்றும் காஸ் நிரப்பும் நிலையங்கள், பள்ளிக்கூடம், மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பட்டாசு கடை வைக்க அனுமதி இல்லை. என்னதான் ஆயிரம் சட்டங்கள் இருந்தாலும், கட்டுப்பாடுகள் விதித்தாலும் நம் கலாச்சாரத்திற்குள் ஊரிப்போன ஒன்று பட்டாசுகள்.
- தனுஜா ஜெயராமன்.