தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்தபோது நடுவானில் இண்டிகோ விமானத்தின் கண்ணாடியில் விரிசல்
சென்னை: தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்தபோது நடுவானில் இண்டிகோ விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. நடுவானில் விமானம் பறந்தபோது விமானியின் முன்பக்கம் உள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 62 பயணிகள் உள்பட 67 பேருடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் சுமார் 15,000 அடி உயரத்தில் பறந்தபோது திடீரென முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதை அறிந்த விமானி உடனே சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். விமானத்தை சென்னையில் தரையிறக்குவதற்கான ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. ஆபத்தை அறிந்த விமானி விமானத்தை சாதுர்யமாக இயக்கி, சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கினார். விமானியின் சாதுர்யமான நடவடிக்கையால் விமானத்தில் பயணித்த 67 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்