ஐதராபாத்தில் நள்ளிரவில் பயங்கரம்: பசு பாதுகாவலர் மீது சரமாரி துப்பாக்கி சூடு
ஐதராபாத்: ஐதராபாத்தில் பசு பாதுகாவலர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்தவர் சோனு. பசு கடத்தலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவரை நேற்று ஒரு மர்ம நபர் தொடர்பு கொண்டு, பசு கடத்தல் தொடர்பாக தன்னிடம் முக்கிய தகவல்கள் இருப்பதாகவும் காட்கேசர் அருகே வந்தால் அதை சொல்வதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி, சோனுவும் சென்றுள்ளார். அந்த நேரத்தில் பசு கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் சோனுவை சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் சிலர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு தெலங்கானா பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த மாதவி லதா கூறுகையில், \”பசுக்களை பாதுகாப்பவர்கள்தான் அரசியலமைப்பையும் பாதுகாக்கிறார்கள். இந்த விவகாரத்தில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்றால், போலீசார் அவர்களுக்கு உதவுகிறார்கள் என்று அர்த்தம்..
குற்றவாளி மஜ்லீஸ் கட்சியை சேர்ந்தவர். இது திட்டமிடப்பட்ட கொலை முயற்சி” என்றார். ஒன்றிய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக டிஜிபி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன் பேசினேன். தெலங்கானாவில் இது போன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று டிஜிபி என்னிடம் கூறினார்’ என்றார்.