பசுவிடம் அத்துமீறியதாக புகார்; செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம்: மத்திய பிரதேசத்தில் கொடூரம்
போபால்: மத்திய பிரதேசத்தில் பசுவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட முதியவரை, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தை சேர்ந்த முகமது ஷாகித் (55) என்ற முதியவர், பசுவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக உள்ளூர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஷாகித் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, அவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 9ம் தேதி, ஈத்கா மைதானம் அருகே குற்றம்சாட்டப்பட்ட முகமது ஷாகித், பசுவிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அதை நேரில் கண்ட சிலர், இதுகுறித்து சில அமைப்பினர் தகவல் தெரிவித்தனர். பின்னர் முகமது ஷாகித்தைப் பிடித்து, கிராமச் சந்தை வழியாக செருப்பு மாலை அணிவித்து கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் ஷாகித்தைக் கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.