வெளிநாடு செல்ல முன் அனுமதி அவசியம்; கெஜ்ரிவாலுக்கு கோர்ட் உத்தரவு
புதுடெல்லி: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய வழக்கில் சிக்கியுள்ள கெஜ்ரிவாலுக்கு, வெளிநாடு செல்வதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடவுச்சீட்டைப் புதுப்பிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது, அமேதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கவுரிகஞ்ச் மற்றும் முசாபிர்கானா ஆகிய பகுதிகளில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் தற்போது பிணையில் வெளியே உள்ளார்.
இந்நிலையில், தனது கடவுச்சீட்டின் தற்போதைய நிலை காரணமாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, அதை புதுப்பிக்க அனுமதிக்கக் கோரி கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த உத்தரப் பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள எம்.பி/எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், கெஜ்ரிவாலின் கடவுச்சீட்டைப் புதுப்பித்துக்கொள்ள நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது. அதன்படி, அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக நீதிமன்றத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.