குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 3வது நாளாக தடை விதிப்பு!
தென்காசி: குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தையொட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். ஐந்தருவி, மெயின் அருவியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.