நீதிமன்றத்தை அரசியல் தளமாக பயன்படுத்தக் கூடாது: ரேவந்த் ரெட்டி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்
புதுடெல்லி: கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றால் எஸ்.டி ,எஸ்.டி. மற்றும் ஒ.பி.சி பிரிவினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தார். இதையடுத்து அதற்கு எதிராக தெலுங்கானா மாநில பாஜக பொதுச்செயலாளர் கரம் வெங்கடேஷ்வர்லாவ் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக அவதூறு வழக்கை தொடர்ந்திருந்தார்.
இதையடுத்து அதனை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி,‘‘ நீதிமன்றத்தை அரசியல் போட்டிக்கான தளமாக பயன்படுத்தக் கூடாது என்று பலமுறை அறிவுறுத்தியும் தொடர்ச்சியாக இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றது.
ஒரு அரசியல்வாதியாக இருக்க வேண்டுமானால், எதையும் தாங்கும் தன்மை வேண்டும் என்று தெரிவித்து மனுதாரருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து எச்சரிக்கையுடன் அதனை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.