அனுமதியின்றி சபரிமலையில் இருந்து சென்னைக்கு கொண்டு சென்ற தங்க தகடுகளை திரும்ப கொண்டு வர நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம்: அனுமதியின்றி சபரிமலையில் இருந்து பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கத் தகடுகளை உடனே திரும்பக் கொண்டு வரவேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை கோயிலில் முன்புறம் உள்ள துவாரபாரகர் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளை பழுது பார்ப்பதற்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு சமீபத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தது. இதற்கு கேரள உயர்நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறவில்லை என்று புகார் எழுந்தது.
இதுகுறித்து சபரிமலை சிறப்பு ஆணையாளர் ஜெயகிருஷ்ணன் கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், தேவசம் போர்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அனுமதியின்றி தங்கத் தகடுகளை சென்னைக்கு அனுப்பி வைத்தது முறையற்றது என்றும், எனவே அவற்றை உடனே சபரிமலைக்கு திருப்பிக் கொண்டு வரவேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தின் தேவசம் போர்டு பெஞ்ச் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது.