மேட்டூர் அனல் மின் நிலைய உலர் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா? : டான்ஜெட்கோவுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து இலவசமாக வழங்கப்படும் உலர் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்துக்கு சொந்தமான திருவள்ளூர், தூத்துக்குடி, சேலம் உள்பட ஐந்து அனல் மின் நிலையங்களில் வெளியாகும் உலர் சாம்பலில், 20 சதவீதம் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மீதம் மற்ற நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது.
சேலம் அனல் மின் நிலையத்தில் கிடைக்கும் உலர் சாம்பல் சிறு, குறு நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படாமல், மாவட்டத்தில் உள்ள முத்துகுமார் டிரேடர்ஸ் என்ற நிறுவனத்துக்கு, சட்டவிரோதமாக வழங்கப்படுகிறது எனவும், இந்த உலர் சாம்பல், அந்த நிறுவனம் வெளிசந்தையில் அதிக விலைக்கு விற்பதாகவும், இந்த முறைகேடு குறித்து, கடந்த ஜனவரி 31ம் தேதி தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனருக்கு அளித்த மீது, நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரிய இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி சேலம் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநர் கோவிந்த ராவ் நேரில் ஆஜராகி, உலர் சாம்பல் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார். அப்போது கடந்த ஜனவரி மாதம் அளித்த புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், தினந்தோறும் ஐந்துக்கும் மேற்பட்ட புகார்கள் வருவதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, மனுதாரர் தெரிவித்த புகார் தொடர்பாக விசாரிக்க மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, இலவசமாக வழங்கப்பட்ட உலர் சாம்பல், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளது குறித்து இந்த குழுவினர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நியமித்துள்ள குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.