"துன்புறுத்தலின்போது அமைதியாக இருப்பது சகிப்புத்தன்மை அல்ல; அடக்கு முறையை நிலைநாட்டும் அடிமைத்தனம்" : ஐகோர்ட் கிளை அதிரடி
மதுரை : "துன்புறுத்தலின்போது அமைதியாக இருப்பது சகிப்புத்தன்மை அல்ல; அடக்கு முறையை நிலைநாட்டும் அடிமைத்தனம்" என்று ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. பரமக்குடியைச் சேர்ந்த இந்திரா என்பவர் தனது கணவர் தன்னை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துவதாக கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் தனசீலனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதற்கு எதிரான வழக்கில், நேரடி சாட்சிகள் இல்லாததால், மனுதாரரை குற்றமற்றவர் எனக்கூறி பரமக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதனை எதிர்த்து இந்திரா தொடுத்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி விக்டோரியா கெளரி, திருமணத்தின் புனிதம் ஒரு தலைப்பட்சமாக அடக்குமுறை என கூறினார். சகிப்புத்தன்மை தங்களது கடமை என்ற எண்ணத்தில் உடல் ரீதியாகும் மன ரீதியாகவும் நடக்கும் துன்புறுத்தல்களை அமைதியாக சகித்துக் கொண்ட தலைமுறையைச் சேர்ந்த இந்திய பெண்களின் பிரதிநிதியாக மனுதாரர் இருக்கிறார் என்றும் எனவே 85 வயது கணவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையும் ரூ.5000 அபராதத்தையும் உறுதி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.