நீதிமன்றங்களில் 5.3 கோடி வழக்குகள் தேக்கம்; அதிகபட்சமாக ஒரு வழக்கு 73 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது : வெளியான அதிர்ச்சி தகவல்
புதுடெல்லி: வழக்கறிஞர்கள் இல்லாததால் விசாரணையை தள்ளி வைக்கக் கூடாது என அனைத்து மாவட்ட நீதித் துறை அதிகாரிகளுக்கும் உயர் நீதிமன்றங்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய நீதித்துறை புள்ளி விவரங்களின்படி, " நாடு முழுவதும் 5.34 கோடி வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இதில் உயர் நீதிமன்றங்களில் 63.8 லட்சம் வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் 88,251 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இதில், வழக்கறிஞர் இல்லாததால் 62 லட்சம், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தலைமறைவானதால் 35 லட்சம், சாட்சிகள் இல்லாததால் 27 லட்சம், மேல் நீதிமன்றங்கள் விதித்த இடைக்காலதடை காரணமாக 23 லட்சம், ஆவணங்களுக்காக காத்திருப்பதால் 14 லட்சம், மனுதாரர்கள் ஆர்வம் காட்டாததால் 8 லட்சம் என 1.78 கோடி வழக்குகள் தாமதமாகி வருகின்றன. அதிகபட்சமாக ஒரு வழக்கு 73 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இது 1952-ல் பதிவு செய்யப்பட்டது ஆகும்."இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இத்தகைய தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்ப்பதில் ஏற்படும் தாமதம் குறித்த வழக்கு உச்சநீதிமன்ற
நீதிபதிகள் பர்திவாலா மற்றும் விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “வழக்கறிஞர்கள் இல்லாததால் விசாரணையை தள்ளி வைக்கக் கூடாது என அனைத்து மாவட்ட நீதித் துறை அதிகாரிகளுக்கும் உயர் நீதிமன்றங்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களும் அவர்களுடைய வழக்கறிஞர்களும் சேர்ந்து விசாரணை நடவடிக்கைகளை தாமதப்படுத்துவது கண்டறியப்பட்டால், ஜாமீனை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும். ஒரு வழக்கறிஞர் தாமதம் செய்தால், தினசரி விசாரணையை உறுதி செய்ய நீதிமன்றத்துக்கு உதவ ஒருவரை நியமிக்கலாம்’’இவ்வாறு தெரிவித்தனர்.