தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய மறுத்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி
சென்னை : தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய மறுத்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6 வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16 ஆம் தேதி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி ரிப்பன் கட்டடம் அருகே நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் 12 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானத்துக்கு தடை விதிக்கக் கோரி 'உழைப்போர் உரிமை இயக்கம்' சார்பில் அதன் தலைவர் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கிய சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என தீர்ப்பளித்தார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.761 ஊதியத்தை தொடர்ந்து வழங்க ஒப்பந்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய மறுத்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்து, அக்.6-க்குள் மனுவுக்கு பதிலளிக்க சென்னை மாநகராட்சி, ஒப்பந்த நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர். மேலும் தூய்மை பணியாளர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்தும்படி மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.