சொகுசு காரில் ஆடு திருடிய தம்பதி: மானாமதுரையில் பரபரப்பு
மானாமதுரை: சொகுசு காரில் ஆடுகளை திருடிச் சென்ற தம்பதியை, சினிமா பாணியில் போலீசார் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, எமனேஸ்வரத்தில் 5 ஆடுகளை மர்மநபர்கள் திருடி சொகுசு காரில் ஏற்றிச் செல்வதாக, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து மானாமதுரை அருகே ஆலம்பச்சேரி விலக்கில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு சொகுசு கார், போலீசார் நிறுத்தியும் நிற்காமல் வேகமாகச் சென்றது. உடனே போலீசார் மானாமதுரை காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்த போலீசார் காவல்நிலையம் முன்பு காரை மறிக்க முயன்றனர். ஆனால், கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து காரை பின்தொடர்ந்து போலீசார் விரட்டிச் சென்றனர்.
நகராட்சி அலுவலகம் அருகே, போலீசாரின் வாகனம் காரை மறித்தது. உடனே காரில் இருந்த ஆணும், பெண்ணும் அருகில் வைகை ஆற்றில் குதித்து தப்பி ஓட முயன்றனர். போலீசாரும் ஆற்றுக்குள் குதித்து விரட்டிப் பிடித்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் மதுரை ஆண்டார்கொட்டாரத்தை சேர்ந்த காளீஸ்வரன் (35), அவரது மனைவி முத்துமாரி (33) என தெரிய வந்தது. இதையடுத்து பரமக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்து திருடப்பட்ட ஆடுகள், கார் மற்றும் தம்பதியை ஒப்படைத்தனர். போலீசார் தம்பதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.