ஓடும் பஸ்சில் பயங்கரம்: மதுவில் விஷம் கலந்து குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
நாமக்கல்: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகேயுள்ள காசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சென்ட்ரிங் தொழிலாளி ராஜ்குமார் (35). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். அதேபகுதியில் உள்ள மணியக்காரன்பாளையத்தைச் சேர்ந்தவர் சுமிதா (40). கார்மெண்ட்ஸ் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு, கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ராஜ்குமாருக்கும், சுமிதாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த ராஜ்குமாரின் மனைவி ரேவதி கண்டித்துள்ளார். இனிமேல், சுமிதாவுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை என சத்தியம் செய்த ராஜ்குமார், கடந்த 29ம் தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டார்.
பின்னர், வீடு திரும்பவில்லை. இதையடுத்து, கடந்த 1ம் தேதி ரேவதிக்கு போன் செய்த ராஜ்குமார், சென்னையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி இரவு 11 மணியளவில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள பல்லக்காபாளையம் தனியார் கல்லூரி அருகே உணவுக்காக நிறுத்தப்பட்ட பஸ்சில் இருந்து இறங்கிய இருவர், வயிறு வலிப்பதாக கூறி அருகில் இருந்த மண் ரோட்டில் நடந்து சென்று வாந்தியெடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர்கள் கோபி அருகே, காசிபாளையத்தைச் சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி ராஜ்குமார், சுமிதா என்பது தெரியவந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சுமிதா இறந்து போனார். நேற்று அதிகாலை 1.30 மணியளவில் ராஜ்குமாரும் உயிரிழந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தகாத உறவு ஜோடி இருவரும், கோவையிலிருந்து சேலத்திற்கு பஸ் ஏறி வந்ததாகவும், அதற்கு முன்பாகவே மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு பேருந்தில் ஏறி, பயணித்துள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து இருவரது வீட்டுக்கும் போலீசார் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு இருவரது உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.