ஓடும் காரில் பயங்கர தீ தம்பதி உயிர் தப்பினர்
கோபி: உறவினர் திருமணத்துக்கு சென்றபோது ஓடும் காரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருந்து வயதான தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள செட்டியம்பாளையம் ஆண்டிகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் வெங்கிடுசாமி (66). இவரது உறவினருக்கு கோபி நாயக்கன்காடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வெங்கிடுசாமி அவரது மனைவி ஆராயாள்(55) ஆகியோர் அதிகாலை வீட்டிலிருந்து காரில் கோபி நோக்கி சென்று கொண்டு இருந்தனர். காரை வெங்கிடுசாமி ஓட்டினார்.
வேட்டைக்காரன் கோயில் மின்வாரிய துணைமின் நிலையம் முன் சென்றபோது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. பின்னர் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கிடுசாமி காரை சாலையோரம் நிறுத்தினார். காரின் இடது புறம் அவரது மனைவி அமர்ந்து இருந்த பகுதியில் கதவை திறக்க முடியாத நிலையில், அதிர்ச்சியடைந்த வெங்கிடுசாமி, காரில் இருந்து இறங்கி சென்று மனைவி அமர்ந்து இருந்த பகுதியில் வெளியில் இருந்த கதவை திறந்து மனைவியை காப்பாற்றினார். அதற்குள் கார் மளமளவென பற்றி எரிய தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்து கோபி தீயணைப்பு துறையினர் வருவதற்குள் கார் முழுமையாக எரிந்து சேதமானது. கார் தீப்பற்றிய உடன் இருவரும் காரை விட்டு இறங்கியதால், அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர். தீ விபத்து குறித்து கோபி போலீசார் விசாரித்து வருகின்றனர்.