திருப்பதி அருகே வனப்பகுதியில் குழந்தைகளை கொன்று புதைத்துவிட்டு தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை: தமிழகத்தை சேர்ந்தவர்கள்
திருமலை: தமிழகத்தை சேர்ந்த தம்பதி, வனப்பகுதிக்குள் குழந்தைகளை கொன்று புதைத்துவிட்டு தாங்களும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் பாகாலா அடுத்த மூலவங்க வனப்பகுதியில் நேற்று சிலர் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் 2 சடலங்கள் அழுகிய நிலையில் தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலங்களை மீட்டனர். அது ஆண் மற்றும் பெண் என்பதும், அவர்கள் கணவன், மனைவியாக இருக்கலாம் எனவும் தெரியவந்தது. மேலும் அருகே ஒரு இடத்தில் ஏதோ புதைக்கப்பட்டு கற்கள் அடையாளமாக வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டனர். அங்கு சென்று தோண்டி பார்த்தபோது 2 குழந்தைகளின் சடலங்கள் இருந்தது. ஆனால் அழுகிய நிலையில் இருந்ததால் அதனை அங்கேயே எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. பின்னர் தம்பதிகளின் சடலங்களை, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தில் ஒரு டாக்டரின் மருந்து சீட்டு இருந்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரை சேர்ந்த சைக்காலஜி டாக்டரின் மருந்துச்சீட்டு அது என தெரிய வந்தது. அதில் கலைச்செல்வன் (38) என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இவர்கள் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதும், இவர்கள் மனநிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம், அதற்காக சிகிச்சை பெற்று வந்திருக்கலாம் எனவும், குழந்தைகள் இருவரையும் கொன்று புதைத்துவிட்டு தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன? இவரகள் யார், தஞ்சையில் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக தஞ்சாவூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் இன்று காலை குழந்தைகளின் சடலங்களை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.