ஈரோட்டில் பேன்சி ஸ்டோர் உரிமையாளர் வீட்டில் ரூ.40 லட்சம் கொள்ளை அடித்த பக்கத்து வீட்டு தம்பதி கைது
*உதவுவதுபோல் நடித்து கைவரிசை
ஈரோடு : ஈரோடு மூலப்பாளையம் ரைஸ்மில் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (50). இவர், மூலப்பாளையத்தில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். இவர், புதிதாக ஈரோடு கே.கே. நகர் லட்சுமி கார்டன் பகுதியில் வீடு கட்டியுள்ளார்.புதுமனை புகுவிழா மற்றும் வீடு மாற்றம் செய்வதற்கான பணியில் ஈடுபட்டு இருந்தார். வீட்டில் பல்வேறு செலவுக்காக ரூ.40 லட்சம் பணத்தை வைத்து இருந்தார். கடந்த 31ம் தேதி பீரோவை திறந்து பார்த்து பணம் இருப்பதை உறுதி செய்துள்ளார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி பீரோவை திறந்து பார்த்த போது பணம் மாயமானது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்த், ஈரோடு தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனந்த் வீட்டின் அருகே வசிக்கும் தனியார் நிறுவன பஸ் டிரைவர் மோகன் குமார் (50) மற்றும் அவரது மனைவி வள்ளி (47) ஆகியோர் அடிக்கடி ஆனந்த் வீட்டுக்கு வந்து உதவி செய்தது தெரியவந்தது.
இந்நிலையில் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். அப்போது ஆனந்த், வள்ளி ஆகியோர் வீட்டுக்குள் வந்து சென்றது தெரிந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரூ.40 லட்சத்தை கொள்ளை அடித்தது உறுதியானது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டது.