நாடு முழுவதும் ரூ.3,000 கோடி திருட்டு டிஜிட்டல் கைது தொடர்பாக விரைவில் கடுமையான உத்தரவு: உச்ச நீதிமன்றம் உறுதி
புதுடெல்லி: நாடு முழுவதும் நீதிமன்றங்களின் பெயரில் நடைபெறும் டிஜிட்டல் கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு அக்டோபர் 27ம் தேதி தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநில யூனியன் பிரதேச அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை நேற்றைக்கு ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு விசாரணையை மேற்கொண்டு வரும் சிபிஐ மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்துள்ளதாகவும், அதன் ஒரு நகலை மட்டும் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞரிடம் வழங்கபட்டுள்ளது. குறிப்பாக சீலிட்ட அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள விபரங்கள் மிகவும் பாதுகாப்பானது என்பதால், அதனை பொதுவெளியில் வெளியிட முடியாது. இந்த விவகாரத்தில் பொருத்தமான வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட உள்ளது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதிகள்,‘‘இதுவரை டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ரூ.3,000 கோடி அளவுக்கு திருடப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. இதில் பெரும்பாலும் சிக்குபவர்கள் வயதான நபர்கள் என்பதை நினைக்கும் போது தான் வேதனையாக உள்ளது. டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற விவகாரங்கள் நம் நாட்டில் மட்டுமே நடைபெறும் நிலையில் கடுமையான உத்தரவுகளை இந்த விவகாரத்தில் பிறப்பிக்காவிட்டால் இது பெரும் பிரச்சனையாகிவிடும். மேலும் இது இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டிய விவகாரம் என்பதால், இதில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவ.10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.