நாட்டின் தனி நபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 2ம் இடம் : ஒன்றிய அரசு தகவல்!!
டெல்லி: தென்மாநிலங்களில் தனிநபர் வருமானம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. மக்களவையில் நாட்டின் தனிநபர் வருமானம் குறித்து பீகார் எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வ அளித்த பதிலில், " 2024-25ம் ஆண்டுக்கான
நிலையான விலையில் தனிநபர் நிகர தேசிய வருமானம் ரூ.1,14,710 ஆக உள்ளது. தனிநபர் வருமானம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையில் மாறுபடும் என்றும் இது பொருளாதார வளர்ச்சியின் நிலைகள், துறைசார் அமைப்பு, கட்டமைப்பு ஏற்றத் தாழ்வுகள் மற்றும் நிர்வாக வழிமுறைகளில் உள்ள வேறுபாடுகள் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன்படி நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகா திகழ்வதாகவும் அங்கு 2024-2025ம் ஆண்டு தனிநபர் வருமானம் ரூ.2,04,605 ஆக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2ம் இடத்தில் தமிழ்நாடு இருப்பதாகவும் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1,96,309 என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அடுத்த இடங்களில் ஹரியானா, தெலங்கானா, மராட்டியம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.