கவுன்சில் கூட்டத்தில் முடிவு ஐஐடியில் பெரும் மாற்றத்திற்கு 25 ஆண்டு கால செயல்திட்டம்: தர்மேந்திர பிரதான் அறிவிப்பு
புதுடெல்லி: ஐஐடிக்களின் 56வது கவுன்சில் கூட்டம் 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடந்தது. இக்கூட்டத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை வகித்தார். கூட்டத்தில், செயற்கை நுண்ணறிவின் வருகைக்கு ஏற்ப பாடத்திட்டம், கற்பித்தல் மற்றும் தேர்வுகளில் தேவையான மாற்றங்கள் குறித்தும், உலகளாவிய ஒத்துழைப்புகளை மேம்படுத்துதல், பலதுறை ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பின் பேட்டி அளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘ஐஐடி கல்வி நிறுவனங்களை உலகளவில் முன்னணியான, ஆராய்ச்சி சார்ந்த மற்றும் உள்ளடக்கிய நிறுவனங்களாக மாற்ற 25 ஆண்டுகால செயல் திட்டம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் தின நூற்றாண்டு விழாவையொட்டி 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் சமூக முன்னேற்றத்தில் ஐஐடிகளை முன்னணியில் நிலைநிறுத்துவதே இந்த செயல்திட்டத்தின் நோக்கம். எனவே அடுத்த 25 ஆண்டுகள் இந்த நிறுவனங்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாமல், சமூக சவால்களைத் தீர்ப்பதிலும் முன்னணியில் இருக்கும்’’ என்றார்.