பேரவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஐ.டி. விங்க் பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சென்னை: சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அதிமுக ஐ.டி.விங்க் பொறுப்பாளர்களுடன் எடப்பாடி நேற்று ஆலோசனை நடத்தினார். அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார்.
முதல் கட்டமாக விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாநகர் மற்றும் புறநகர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் மாவட்டப் பொறுப்பாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதிலும், தகுதியற்ற பெயர்களை நீக்குவதிலும் மிகுந்த கவனத்துடன் ஒரு இயக்கமாக செயல்பட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமைக் கழகச் செயலாளர் எஸ்.பி வேலுமணி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.