இருமல் மருந்து விவகாரம் எதிரொலி மருந்து தர கண்காணிப்பை கடுமையாக்க புதிய சட்டம்: குளிர்கால கூட்டத்தொடரில் இயற்ற ஒன்றிய அரசு திட்டம்
புதுடெல்லி: மருந்து தர சோதனை மற்றும் சந்தை கண்காணிப்புகளை கடுமையாக்க புதிய சட்டம் கொண்டு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை குடித்த 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்த மருந்துக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டு, மருந்து நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவ பொருட்களுக்கான பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டுமென கோரிக்கைகள் வலுத்துள்ளன.
மேலும் இந்திய மருந்து உற்பத்தியாளர்களின் கடுமையான தர குறைபாடுகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள சுகாதார ஒழுங்குமுறை அமைப்புகள் மீண்டும் மீண்டும் புகார் எழுப்பி வருகின்றன. எனவே மருந்துகளின் தர சோதனை மற்றும் சந்தை கண்காணிப்பை கடுமையாக்க ‘மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 2025’ என்ற மசோதாவை வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான வரைவு ஆவணம் நேற்று முன்தினம் நடந்த ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் உயர்மட்ட கூட்டத்தில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவர் ராஜீவ் ரகுவன்ஷி சமர்ப்பித்துள்ளார். புதிய சட்டத்தின்படி, போலி அல்லது தரமற்ற மருந்துகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பிற்கு (சிடிஎஸ்சிஓ) முதல் முறையாக சட்டப்பூர்வ அதிகாரங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய சட்டம் 1940ம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தை மாற்றும். இது சர்வதேச தர நிலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.