இருமல் மருந்தால் 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
புதுடெல்லி: மத்தியப்பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் இருமல் மருந்தை உட்கொண்ட 14 குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மருந்தில், அனுமதிக்கப்பட்ட 0.1 சதவீத அளவைக் காட்டிலும் மிக அதிகமாக, அதாவது 48.6 சதவீதம் வரை ‘டைஎத்திலீன் கிளைக்கால்’ என்ற நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் கலந்திருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,\\”குழந்தைகள் மரணங்கள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் மருந்து தயாரிப்பு, ஒழுங்குமுறை, சோதனை மற்றும் விநியோகம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட மருந்து தயாரிப்புகளை தடை செய்து, நாடு தழுவிய அளவில் திரும்பப்பெற வேண்டும். அனைத்து இருமல் மருந்துகளிலும் நச்சுத்தன்மை உள்ளதா என கட்டாய சோதனை நடத்த வேண்டும். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வலியுறுத்தி உள்ளார். இதையடுத்து இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.