இருமல் மருந்துக்கு 24 குழந்தைகள் பலி; சென்னை மருந்து கம்பெனி அதிபருக்கு நீதிமன்ற காவல்: மபி நீதிமன்றம் உத்தரவு
சிந்த்வாரா: இருமல் மருந்து சாப்பிட்டு 24 குழந்தைகள் பலியான சம்பவத்தில் கைதான மருந்து கம்பெனி அதிபர் ரங்கநாதனை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு மபி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மபி மாநிலம்,சிந்த்வாராவில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை குடித்ததில் 24 குழந்தைகள் பலியாகினர். தரமற்ற மருந்தை பரிந்துரை செய்ததாக சிந்த்வாரா பகுதியில் உள்ள மருத்துவர் பிரவீன் சோனியை போலீசார் கைது செய்தனர்.
கோல்ட்ரிப் மருந்தை விநியோகம் செய்த சவ்ரவ் ஜெயின்,மருந்து கடை அதிபரும் பிரவீன் சோனியின் உறவினருமான ராஜேஸ் சோனி, பிரவீனின் மனைவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த குற்றச்சாட்டின் கீழ் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீசன் பார்மசூட்டிக்கல் நிறுவனத்தின் அதிபர் ரங்கநாதனை மபி சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்து சிந்த்வாராவுக்கு கொண்டு சென்றனர். அவரது 10 நாள் போலீஸ் காவல் நேற்று முடிவடைந்தது.
இதையடுத்து பராசியாவில் உள்ள கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் ரங்கநாதனை போலீசார் ஆஜர்படுத்தினர்.அப்போது ரங்கநாதனை சிறையில் அடைக்க நீதிபதி கவுதம் குர்ஜார் உத்தரவிட்டார். இதற்கிடையே,மருத்துவர் பிரவீன் சோனி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உள்ளூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் அவர் மபி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.